அரசு எடுக்கும் நல்ல முடிகளுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என்று செங்கோட்டையன் கூறினார்.

இரு மொழிக் கொள்கையாக இருந்தாலும், நீட் தேர்வாக இருந்தாலும் தமிழ்நாடு அரசு எடுக்கும் நல்ல முடிவுக்கு உறுதுணையாக இருப்போம் என அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன் சட்டமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமுன்வடிவு அடித்தட்டு மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

1967 ஆம் ஆண்டுக்கு பிறகு திராவிட இயக்கம் தான் தமிழ்நாட்டை ஆளும் என்பதற்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார் எனவும், திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருமே தவிர திராவிட மண்ணை யாராலும் வீழ்த்த முடியாது எனவும் அவர் பேசினார்.

மாணவர்கள் இடைநிற்றல் 0.75 சதவிகிதமாக இருப்பதாலும் அதுவும் இருக்கக் கூடாது என்பது தான் எங்களின் கொள்கை எனவும் கூறிய செங்கோட்டையன், யாழ்பாணத்திற்கு ஒரு லட்சம் நூல்கள் வழங்கியது, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு நூல்களை அனுப்பி வைத்தல், கல்வி தொலைக்காட்சி தொடங்கியது என அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை விளக்கிப் பேசினார்.

மேலும், இரு மொழிக் கொள்கையாக இருந்தாலும் சரி நீட் தேர்வாக இருந்தாலும் சரி அரசு எடுக்கும் நல்ல முடிவுக்கு உறுதுணையாக இருப்போம் எனவும் செங்கோட்டையன் கூறினார்.

முன்னதாக, அரசு பள்ளி மாணவர்கள் தொழிற்படிப்புகளில் சேர்வதற்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கான சட்டமுன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here