நாட்டின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உள்பட 14 பேர் பயணம் செய்த விமானப்படையின் எம்ஐ17வி5 ரக ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கும் முன் கடுமையான மேகக்கூட்டத்துக்குள் சென்று மறைந்தது உள்ளூர்வாசி ஒருவர் எடுத்த வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.

ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இந்த வீடியோ காட்சியை உள்ளூர் மக்களிடம் பெற்று, தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால், இந்திய விமானப்படைத் தரப்பில் இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து ஏதும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்துக்குள்ளான விமானப்படையின் அதிநவீன எம்ஐ7வி5 ஹெலிகாப்டர் கடந்த 2012-ம் ஆண்டு விமானப்படையில் சேர்க்கப்பட்டது. இதற்கு முன் சில விபத்துகளை இந்த ரக ஹெலிகாப்டர்கள் சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது.

கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவக் கல்லூரி ஆய்வுக்காக நேற்று காலை இரு ஹெலிகாப்டர்கள் சென்றன.

அதில் ஒரு ஹெலிகாப்டரில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி, பிபின் ராவத் உதவியாளர், பாதுகாப்பு கமாண்டோக்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர்தான் குன்னுர் அருகே காட்டேரி மலைப்பகுதியில் நஞ்சப்பசத்திரம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இதில் ஹெலிகாப்டரில் பயணித்த தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி உள்ளிட்ட 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்குவதற்கு முன் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர் எடுத்த வீடியோ வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், ஹெலிகாப்டர் சத்தத்துடன் வானில் பறக்கும் காட்சியை கிராம மக்கள் பார்க்கிறார்கள். அப்போது திடீரென ஹெலிகாப்டர் வானில் மேகக்கூட்டத்துக்குள் சென்று மறைகிறது. அடுத்த சில நொடிகளில், மிகப்பெரிய சத்தம் கேட்டவுடன், ஹெலிகாப்டர் பறக்கும் சத்தம் நின்றுவிட்டது.

இதைக் கேட்ட வீடியோவில் உள்ள ஒருவர், “என்ன ஹெலிகாப்டர் சத்தம் கேட்கவில்லை. வேறு சத்தம் கேட்கிறதே, ஏதாவது இடத்தில் மோதிவிட்டதா?” எனக் கேட்கிறார். அதற்கு வீடியோ எடுத்தவர், “ஆம். அப்படித்தான் நினைக்கிறேன். வாருங்கள்” என்று கூறியபடியே அனைவரும் விபத்து நடந்த இடத்துக்கு ஓடுகிறார்கள்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், இந்த வீடியோ குறித்து இந்திய விமானப்படைத் தரப்பில் எந்த விளக்கமும், அதிகாரபூர்வமாக அளிக்கவில்லை.