திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றும், அவர்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகச் சரித்திரமே கிடையாது என்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலையொட்டி விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று விழுப்புரத்தில் மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

”திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 202 அறிவிப்புகளை நிறைவேற்றியுள்ளதாக முதல்வர் சொல்கிறார். அப்படியெனில் எவ்வளவு திட்டங்களை நிறைவேற்றி இருக்கவேண்டும். நீங்களே எண்ணிப் பாருங்கள். தேர்தலின்போது 505 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு, கூடுதலாக 20 என 525 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. இப்போது அதில் 202 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறுகிறார். ஆனால் 3, 4 அறிவிப்புகள் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மற்றவை சாதாரண அறிவிப்புகளாகும். இதனை ஊடகங்களில் முதல்வர் வெளியிட்டுள்ளார்.

சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவுக்கு உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு உச்சத்துக்குச் சென்றுள்ளது. ரவுடிகளைக் கைது செய்வதாக டிஜிபி சொல்கிறார். இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள்? அதிமுக அரசில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. சிறப்பாக ஆட்சி செய்ததாக நாங்கள் விருது பெற்றோம். இந்த ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் குடிமராமத்துத் திட்டத்தைக் கொண்டுவந்தோம். திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளது. நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆக உயர்த்தப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது சன்ன ரகத்திற்கு ரூ.300-ஐ மட்டுமே உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. கரும்புக்கு 1 டன்னுக்கு ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும் என அறிவித்துவிட்டு தற்போது ரூ.105 மட்டுமே உயர்த்தி அறிவித்துள்ளனர்.

அதிமுக ஆட்சியில் இந்தியாவில் உணவு தானிய உற்பத்தியில் 100 லட்சம் மெட்ரிக் டன் பெற்று நாம் விருது பெற்றோம். அதிமுக அரசு மக்களின் அரசு. பின்தங்கிய மாவட்டமான விழுப்புரத்தில், இளைஞர்கள் படிக்கும் வகையில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த ஊரைச் சேர்ந்த உயர் கல்வித்துறை அமைச்சர், அதனை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைப்பதாக அறிவித்துள்ளார். மாணவர்களை உயர்த்தியது அதிமுக அரசுதான்.

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 என அறிவித்தார்கள். கல்விக் கடன் தள்ளுபடி என்றார்கள். முதியோர் உதவித்தொகை ரூ.1,500 என்றார்கள். மகளிர் சுய உதவிக்குழு வாங்கிய கடன் தள்ளுபடி என்றார்கள். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்று சொல்லிவிட்டு தற்போது மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளதாகப் பச்சைப் பொய் சொல்கிறார்கள். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் எல்லாத் தரப்பு மக்களையும் ஏமாற்றிய கட்சி திமுக. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

திமுகவைப் பொறுத்தவரை சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகச் சரித்திரம் கிடையாது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மினி கிளினிக்கைப் படிப்படியாகக் குறைத்துவிட்டு, அதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட நடமாடும் மருத்துவமனை என்பதைப் பெயர் மாற்றி மக்களைத் தேடி மருத்துவம் என்று சொல்கிறார்கள். அதிமுக கொண்டுவந்த திட்டங்களை திமுக கொண்டுவந்த திட்டங்களாகச் சொல்லி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் 644 திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, 607 திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டது. 198 திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டும், 409 திட்டங்கள் முடியும் தறுவாயிலும் இருந்தது. அதிமுக ஆட்சியில் ஜனநாயக முறைப்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது”.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முன்னதாக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, ”ஒரு அரசுக்கு மக்களிடம் 2 வருடங்களுக்குப் பிறகு அதிருப்தி வரும். ஆனால் ஆட்சிக்கு வந்த 4 மாதத்தில் இந்த அரசு, மக்களிடம் எதிர்ப்பைச் சம்பாதித்துவிட்டது. இந்த அரசு மக்களை ஏமாற்றி வஞ்சித்து வருகிறது. இது சீட்டிங் அரசு. குற்றவாளிகள் நிறைந்த அமைச்சரவையாகவே இந்த அரசு உள்ளது. மக்களை ஏமாளி என்று நினைக்கும் அரசுக்கு இத்தேர்தலில் பாடம் புகட்டவேண்டும். 2, 3 திட்டங்களை நிறைவேற்றிவிட்டு, 202 திட்டங்களை நிறைவேற்றியதாகச் சொல்கிறார்கள். இதனைப் பொது வெளியில் விவாதிக்கமுடியுமா என சவால் விடுகிறேன்” என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் சக்கரபாணி, அர்ஜூணன், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.