சுதந்திரத்திற்கு பிறகு நேருவின் கொள்கையில் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நேரு சுதந்திர போராட்டத்திற்கு ஆற்றிய பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. நேருவை ஏன் இந்த அளவு வெறுக்க வேண்டும் என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

சுதந்திர தின போஸ்டரில் நேருவின் புகைப்படம் தவிர்க்கப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள்  சிவசேனா, இந்த அளவுக்கு நேருவை வெறுப்பதற்கு காரணம் என்ன என்றும் பாஜகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இதேபோன்று விவகாரங்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் பண்பை பிற அரசியல் கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சிவசேனா பாராட்டுத் தெரிவித்துள்ளது.

நாட்டின் 75வது சுதந்திர தினம் அண்மையில் கொண்டாடப்பட்ட நிலையில், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் ( (ICHR) வெளியிட்டுள்ள போஸ்டரில் முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.  காங்கிரஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில்  சஞ்சய் ராவத் எழுதியுள்ள கட்டுரையில், “பாஜகவுக்கு சோனியா காந்தியுடனோ, ராகுல், பிரியங்காவுடனோ வேறுபாடு இருக்கலாம். ஆனால், இந்த அளவு நேருவை ஏன் வெறுக்க வேண்டும். நேரு உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் தற்போதைய அரசாங்கத்தால் பொருளாதாரத்தை நிரப்புவதற்காக விற்கப்படுகின்றன.

சுதந்திரத்திற்கு பிறகு நேருவின் கொள்கையில் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நேரு சுதந்திர போராட்டத்திற்கு ஆற்றிய பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது.நேரு  உருவாக்கிய தேசிய சொத்துக்களை அரசு இப்போது விற்று வேடிக்கை பார்க்கிறது, இல்லையெனில் நாடு பட்டினி கிடக்கும், மக்கள் வேலையில்லாமல் இருப்பார்கள்.

தமிழக முதல்வரின் பண்பு

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், பள்ளிப் பைகளில் இடம்பெற்ற முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா,எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களை நீக்க வேண்டாம் என்றும் உடனடியாக  மாணவர்களுக்கு வழங்கும்படியும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

ஸ்டாலினின் தந்தையும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போது கைது செய்யப்பட்டு வீட்டில் இருந்து  வெளியே இழுத்து வரப்பட்டார். ஆனால், தனது மாநிலத்தில் வளர்ச்சிக்காக அதனை மறந்து உன்னத பண்பை ஸ்டாலின் வெளிப்படுத்தியுள்ளார். இதில் இருந்து அரசியல் கட்சிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.