தேனி: அனைவரும் ஒன்றிணைந்து நம் வழி தனி வழி என நிரூபிப்போம் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தில் நாளை கட்சி நிர்வாகிகளான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் மற்றும் கூடலூர் நகர கழக செயலாளர் அருண்குமார் ஆகியோர் இல்ல திருமண விழாவில் பங்கேற்க அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தேனி வந்தார்.
இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி தேனி மாவட்டத்திற்கு வருவது இதுவே முதன்முறை. இதனால், அதிமுக அமைப்புச் செயலாளர் எஸ்.டி.கே ஜக்கையன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மிகப் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி, இன்று (ஜன.23) காலை தேனி வட புதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புறவழிச்சாலை பிரிவில் எடப்பாடி ழனிச்சாமிக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அங்கிருந்த மேடையில் ஏறிப் பேசிய எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர், ஜெயலலிதா கனவை அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம். அனைவரும் ஒன்றிணைந்து நம் வழி தனி வழி என்ற பாணியில் செயல்படுவோம் என்று கூறினார். அப்போது தொண்டர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர்.
முன்னதாக நேற்று இபிஎஸ் வருகைக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் வெற்றி பெற்றதுபோல் அதிமுக நிறுத்தும் வேட்பாளர் ஈரோடு கிழக்கு தொகுதியில் அமோக வெற்றி பெறுவார். தேர்தலில் போட்டியிடுவதே கட்சிக்கு அழகு. ஆனால், பாஜக கேட்டால் விட்டுத்தருவோம் என்று ஓபிஎஸ் பேசியிருக்கிறார்.இது விசித்திரமாக உள்ளது. இரு அணிகள் இணைப்புக்கு சாத்தியமே இல்லை” என்று கூறியிருந்தார்.