மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் புதிய படத்திற்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

கேரளத் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் லிஜோ ஜோஸ் பெலிச்சேரி. ‘ஆமென்’, ‘அங்காமலி டைரீஸ்’, ‘ஈ.மா.யூ’, ‘ஜல்லிக்கட்டு’ என இவர் இயக்கிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இவரின் ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம் கடந்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டது. கடந்த ஆண்டு வெறும் 19 நாட்களில் ‘சுருளி’ என்ற படத்தை எடுத்து முடித்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து மம்மூட்டி நடிப்பில் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தை இயக்கினார். ஒரே நேரத்தில் தமிழ் – மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் அண்மையில் கேரள திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், லிஜோ ஜோஸ் பெலிச்சேரி அடுத்து மோகன்லாலுடன் இணைந்துள்ளார்.

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் லிஜோ ஜோஸ் – மோகன்லால் இணையும் படத்திற்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் மோகன்லால் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இப்பட்டத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெறும் இப்படத்தில் நடிகர் மோகன்லால் மல்யுத்த வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.