9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டியது.  தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் பெரிய மாவட்டங்களாக இருந்த நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. புதிதாக தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய  மாவட்டங்கள் உதயமாகின. இந்த 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.  அப்போது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி  பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

இந்த நிலையில் விடுபட்ட உள்ளாட்சிகளுக்கு விரைந்து தேர்தல் நடந்துமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டியது.  வாக்காளர்கள் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு கடந்த மாதம் 31-ம் தேதி வாக்காளர் பட்டியலும் வெளியானது.

மாவட்ட வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமனமும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் போது உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.