டெல்லி: 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் பல லட்சம் கோடி மோசடி நடந்துள்ளதாக திமுக எம்.பி.யும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 5ஜி அலைக்கற்றை ஏலத்தை ஒன்றிய அரசு முறையாக நடத்தவில்லை. 2ஜி, 3ஜி, 4ஜி உடன் ஒப்பிடும் போது 5ஜி அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என்று ஒன்றிய அரசே கூறியது. அவ்வாறு இருக்க தற்போது ரூ.1.50 லட்சம் கோடிக்கு மட்டுமே 5ஜி அலைக்கற்றை ஏலம் நடந்துள்ளது. எஞ்சிய பணம் எங்கே சென்றது? என்று ஒன்றிய அரசுதான் பதிலளிக்க வேண்டும்.

5ஜி அலைக்கற்றை ஏலம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். டிராய் தலைவர் வினோத்ராய் யாருக்காக இதை செய்தார் என விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 30 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றை விற்பனையில் ரூ.1.76 லட்சம் கோடி நஷ்டம் என அப்போதைய தலைமை கணக்காயர் வினோத் ராய் தெரிவித்திருந்தார். தற்போது 51 ஜிகா ஹெட்ஸ் கொண்ட 5ஜி அலைக்கற்றை மிகக்குறைவான தொகைக்கு அதாவது ரூ.1.50 லட்சம் கோடிக்கு மட்டுமே விற்பனையாகியுள்ளது.

5ஜி அலைக்கற்றை யாருக்காக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது? என்றும் ஆ.ராசா கேள்வி எழுப்பினார். 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் எவ்வளவு மோசடி நடந்துள்ளது என்பதை ஒன்றிய அரசு விசாரிக்க வேண்டும். பாஜக அரசு விசாரிக்கவில்லை என்றால் பின்னர் வரும் புதிய அரசு 5ஜி அலைக்கற்றை ஏல மோசடி குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.