மதிமுக தலைமைக் கழக செயலாளராக வைகோ மகன் துரை வையாபுரி நியமிக்கப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று (மார்ச் 23) நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் மதிமுகவின் அரசியல் நடவடிக்கைகள், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதிமுகவின் தலைமைக் கழக செயலாளராக துரை வையாபுரி நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே தலைமைக் கழக செயலாளர் மற்றும் இரண்டு மாநில துணை செயலாளர்கள், ஒரு தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் தலைமைக் கழக செயலாளர் பொறுப்புக்கும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து துரை வையாபுரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துரை வையாபுரி தேர்வு குறித்து மதிமுக பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே கடந்த அக்டோபர் மாதம் தலைமைக் கழக செயலாளராக அறிவிக்கப்பட்ட துரை வையாபுரிக்கு அந்த பதவிக்கான ஒப்புதல் வழங்கி இன்றைய பொதுக்குழுவில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

மேலும், கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராக பேசக்கூடிய நபர்கள், கட்சியின் நடவடிக்கைகளை விமர்சித்து பொதுவெளியில் பேசுபவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு முழு அதிகாரம் அளித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.