மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைக்க வேண்டும்; கட்சியில் பொதுச்செயலாளர் வைகோவுக்கு இனி ஒத்துழைப்புத் தருவதில்லை என சிவகங்கையில் கூடிய 3 மாவட்டச் செயலாளர்கள் வைகோவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் புலவர் செவந்தியப்பன் (சிவகங்கை), சண்முகசுந்தரம் (விருதுநகர்), செங்குட்டுவன் (திருவள்ளூர்) ஆகியோர் நேற்று சிவகங்கையில் மதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாகச் செயல்பட்டு வருகிறார். திமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாகக் கூறித்தான் திமுகவில் இருந்து மதிமுக பிரிந்தது. ஆனால், தனது மகனை கட்சிக் கொள்கைக்கு விரோதமாக துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளார். இதற்கு 10-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இனிமேல் பொதுச் செயலாளர் வைகோவுக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம். மேலும் மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்றனர்.

அப்போது, கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினர் அழகுசுந்தரம், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் நாகை மோகன், சிவகங்கை மாவட்ட அவைத் தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளர் தங்கப்பாண்டியன், விருதுநகர் மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் பாரதமணி ஆகியோர் உடனிருந்தனர்.

இதற்கிடையே, சிவகங்கை மாவட்ட மதிமுக அலுவலகத்துக்கு வெளியே திரண்ட மதிமுகவினர், வைகோவுக்கு எதிராகப் பேட்டிஅளித்ததைக் கண்டித்து முழக்கமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்க சிவகங்கை டிஎஸ்பி பால்பாண்டி, நகர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தகவலறிந்த சிவகங்கை தாசில்தார் தங்கமணி அங்கு வந்து இரு தரப்புடனும் பேசி சமரசம் செய்து அவர்களை கலைந்து போகச் செய்தார்.

மதிமுக சிவகங்கை மாவட்ட பொதுச் செயலாளர் சார்லஸ், தீர்மானக்குழு உறுப்பினர் பாலுச்சாமி ஆகியோர் கூறுகையில், சிவகங்கை மாவட்டத்தில் மதிமுகவினர் அனைவரும் ஒன்றாக உள்ளோம். பொதுச்செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வையாபுரி தலைமையில் மதிமுகவிலேயே செயல்படுவோம் என்றனர்.