மதுரை: உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கும் முயற்சிக்கு முன்னோடியாக 20 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிய பணிகளால் மதுரையில் செயல்படும் ஏடிசி சட்ட நூல் மையம் 300 நூல்களை தமிழாக்கம் செய்து வெளியிட்டு சாதித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்குநாள் வலுப்பெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கேற்ற விழாவின்போது நேரடியாகவும், பிரதமருக்கு கடிதம் மூலமும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இக்கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் முன்னிலையில் பேசும்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும். அத்துடன் பிற மாநிலங்களில் தமிழை 3-வது மொழியாக்கும் முயற்சியிலும் நான் ஈடுபடுவேன் என பேசி தமிழ் மொழியின் தொன்மையை புகழ்ந்துள்ளார்.

பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை ஆக்குவதற்கு ஏதுவாக, தமிழ் மொழியில் தரமான சட்ட நூல்களை வெளியிடுவதற்கு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை ஆக்குவதில் உள்ள சிரமங்களை நவீன தொழில்நுட்பத்தின்மூலம் எளிதில் சரிசெய்திட முடியும் என குறிப்பிட்டுள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

 

முதல்வர் சுட்டிக்காட்டியபடி தமிழில் சட்ட நூல்ளை மொழியாக்கம் முயற்சியை மதுரையிலுள்ள ஏடிசி சட்ட நூல் மையம் 20 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. இதுவரை 300 நூல்கள் வரையில் இந்த மையம் பல்வேறு சட்ட நூல்களை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளது.

 

இது குறித்து ஏடிசி சட்ட நூல் மையத்தின் நிறுவனர் ஏடிசி.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ”2002-ம் ஆண்டு புதுடெல்லி சென்றபோது ஆங்கிலத்திலிருந்து இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட சட்டநூலை பார்த்தேன். இதுபோல் தமிழிலிலும் வெளியிட வேண்டும் என தீர்மானித்தேன். முப்பெரும் குற்றவியல் சட்டங்கள் என்ற நூலை தமிழில் 2002-ல் வெளியிட்டோம். நூலின் இடது கை பக்கம் ஆங்கிலம், வலதுபக்கம் தமிழ் மொழியாக்கம் என எளிமையாக அச்சிடப்பட்டிருந்தது. சிவகாசியிலுள்ள பிரியதர்ஷினி அச்சகம் வெளியிட்ட இந்த நூல் பெரும் வரவேற்பை பெற்றதுடன் தமிழ் வளர்ச்சித்துறையின் பரிசையும் வென்றது.

 

வி.ஆர்.பூபாலன், ஞானகுருநாதன், கு.சாமிதுரை, எம்.அஜ்மல்கான், ஆர்.காந்தி உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஏடிசி நிறுவன ஆசிரியர் குழுவில் இணைந்து செயலாற்றுகின்றனர். 20 ஆண்டுகளில் மொழிமாற்ற நூல்கள் 200, இருமொழி பதிப்பாக 100 நூல்கள் என 300 புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். அனைத்திற்குமே நல்ல வரவேற்பு.

சட்ட மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், தமிழில் வாதிடும் வழக்கறிஞர்களுக்கு நல்ல பலனை அளித்துள்ளன. ஆங்கிலத்தை எளிதாக புரிந்து கொள்ளவும், ஆங்கில புலமையை வளர்க்கவும் இந்த நூல்கள் பயன்படுகின்றன. சட்ட நூல்கள் மொழிமாற்றத்தில் முதல்வரின் ஆசை நிறைவேற மாநில சட்டத்துறையும், தமிழ்துறையும் இணைந்து செயல்பட வேண்டும். சிவில், குற்றவியல், வருவாய் என பல்வேறு துறைசார்ந்த சட்ட நூல்கள் பல ஆயிரம் உள்ளன. தமிழில் வெளியிடுவதற்கு சரியான கட்டமைப்பும் உள்ளது” என்றார்.

ஏடிசி நூல் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசு வழக்கறஞர் தங்க அரவிந்த் கூறுகையில், ‘உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இருமாதத்திற்கு ஒருமுறை தீர்ப்பு திரட்டு என்ற பெயரில் தமிழில் இதழாக வெளியாகிறது. இதில் பயன்படுத்தும் வார்த்தைகளை மையப்படுத்தி சட்ட நூல்களை தமிழில் மொழி மாற்றம் செய்கிறோம்.

தமிழ் சொற்கள் குறி்தது எந்த சந்தேகமும் எழாது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 20 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது 25 நூல்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. சட்ட நூல்களை தமிழில் அனைவரிடமும் சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுகிறோம். தமிழ் வழக்காடு மொழியானால் உயர் நீதிமன்றத்திற்கு மேலும் திறமையான பலநூறு வழக்கறிஞர்கள் கிடைப்பர்” என்றார்.