ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பாக நடக்கும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடக்கும் பாரம்பரிய ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு காளைகளை போட்டிக்கு தயார்படுத்தி வருகின்றனர்.

தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களில் திருவிழா போல் களைகட்டும். இதில், மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக பிரசித்திப் பெற்றவை. இந்தப் போட்டியை காண உள்ளூர் முதல் உலக நாடுகளில் இருந்தும் பார்வையாளர்கள் திரள்வார்கள். நூற்றாண்டுகளை கடந்து ஆண்டுதோறும் நடந்த ஜல்லிக்கட்டுக்கு கடந்த 10 ஆண்டாக பல்வேறு சோதனைகள் ஏற்பட்டு வருகிறது. காளை மாடுகள் 2011-ஆம் ஆண்டு காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, குரங்கு ஆகிய வனவிலங்குகள் இடம்பெற்ற அந்தப் பட்டியலில், காளைகளையும் சேர்த்தனர்.

இதையடுத்து, வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் காளைகளுக்கும் அமலானதால் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு நெருக்கடி ஏற்படத் தொடங்கியது. விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கால் தமிழகத்தில் 2015, 2016-ஆம் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. 2017-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை நாளில் ஜல்லிக்கட்டு நடக்காததால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் திரண்டு கன்னியாகுமரி முதல் சென்னை மெரீனா பீச் வரை திரண்டு போராட்டம் நடத்தினர். அதன்பிறகு தமிழக சட்டசபையில் சிறப்பு சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் கடந்த ஆண்டு வரை எந்த தடையின்றி நடந்து வந்தது.

இந்நிலையில், நடப்பாண்டு மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தற்போது நடக்கிறது. இதில், தமிழகத்தை அனைத்து கட்சிகளும் இணைந்து ஜல்லிக்கட்டு தடையின்றி நடக்க வேண்டும் குரல் எழுப்பி வருகிறார்கள். உச்ச நீதிமன்ற ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை பரபரப்பு ஒருபுறம் நீடிக்கும் நிலையில், மற்றொரு புறம் அத்தகைய பதற்றம் எதுவும் இல்லாமல் மதுரை ஜல்லிக்கட்டு கிராமங்களில் வழக்கம்போல் பொங்கல் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான காளைகளை அதன் உரிமயைாளர்கள் தயார் செய்கிறார்கள்.

மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்க தற்போதே பயிற்சி எடுக்கத் தொடங்கி விட்டார்கள். அதுபோல், மூத்த வீரர்கள், இந்த ஆண்டு முதல் முறையாக களம் இறக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்குகின்றனர். தமிழக அரசும், போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடு வழிமுறைகளையும், போட்டி ஏற்பாட்டாளர்கள் அதற்கான ஆலோசனையும் தற்போதே மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

மதுரை வைகை ஆற்றில் தற்போது தினமும் ஜல்லிக்கட்டு காளைகளை அழைத்து வரும் வீரர்கள், அதற்கு நீச்சல் பயிற்சி வழங்குகிறார்கள். இந்த ஆண்டு வைகை ஆறு, கண்மாய்களில் தண்ணீர் காணப்படுவதால் காளை உரிமையாளர்களுக்கு பயிற்சி அளிப்பது எளிதாக உள்ளதாக தெரிவித்தனர்.

காளை உரிமையாளர்கள் கூறுகையில், ‘‘ஜல்லிக்கட்டுக்காக தயாராகும் காளைகளுக்கு உணவில் தொடங்கி பல்வேறு பயிற்சிகள் வரை அனைத்திலும் காளை உரிமையாளர்கள் சிறப்பு கவனம் செலுத்துவோம். வெறும் பரிசுகளுக்காக மட்டுமில்லாமல் காளைகளை போட்டியில் களம் இறக்குவதில்லை. போட்டிகளில் தங்கள் காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசி சீறி பாய்ந்து நின்று விளையாண்டு பரிசுகளை பெற்றால் காளை வளர்ப்போரும், அவர்களை சார்ந்தோரும் தாங்களே வெற்றிப் பெற்றதுபோல் கவுரவமாக பார்ப்பார்கள். அவர்கள் காளைகளுக்கு அடுத்தடுத்த ஆண்டு போட்டிகளிலும், சந்தைகளிலும் மதிப்பு கூடும். அதனால், மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நடக்கும் சந்தைகளில் காளைகளை கன்றுகளாக வாங்கி அதற்கு சிறு வயது முதலே ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு தயார்ப்படுத்துவார்கள்.

ஆரம்பத்தில் சிறு சிறு போட்டிகளில் பங்கேற்க வைத்து அதில் சிறப்பான பயிற்சியும், வெற்றிகளையும் பெற்றப்பிறகு அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற பிரபலமான போட்டிகளில் களம் இறக்குவார்கள். வாடிவாசலில் காளைகள், காலை எடுக்கும் வேகம்தான் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் ஓடுவதற்கு உதவும். தாவி ஓட வைக்கும் பயிற்சியும், மண்ணை குத்தும் பயிற்சியும், கூட்டத்தை கண்டு மிரட்சியடையாமல் நின்று விளையாடுவதற்கு காளைகளுக்கு உதவும்’’ என்றனர்.