பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மல்லிகைப் பூவின் விலை உயர்ந்து வருகிறது. வியாழக்கிழமை மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பூ மார்க்கெட்டில் கிலோ ரூ.2500-க்கு விற்பனையானது.

கடந்த காலத்தில் பண்டிகை நாட்களில் மட்டும் மதுரை மல்லிகைப் பூவுக்கு பற்றாக்குறை ஏற்படும். கடந்த ஒராண்டாக மதுரை மல்லிகைப் பூக்களுக்கு பற்றாக்குறை ஏற்படத் தொடங்கியிருக்கிறது. பெரிய சந்தைகளில் மட்டுமே மல்லிகைப் பூக்கள் கிடைக்கிறது. சில்லறை பூ வியாபாரிகள், மல்லிகை பூ விற்பதில்லை. அந்தளவுக்கு அதன் விலை சாதாரண நாட்களிலும் உச்சத்தில் இருப்பதோடு போதுமான பூக்களும் சந்தைக்கு வருவதில்லை.

இதனால், பெண்கள் மல்லிகைப் பூக்களுக்கு மாற்றாக முல்லை, பிச்சிப்பூ வாங்கி தலையில் சூட ஆரம்பித்துள்ளனர். தற்போது பொங்கல் பண்டிகை நெருங்குவதால் மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்கள் விலையும் உயர ஆரம்பித்துள்ளது. வியாழக்கிழமை மதுரை மல்லிகைப்பூ ரூ.2500-க்கு விற்றது. பூக்கள் வரத்தும் குறைவாக இருந்தது.

இதுகுறித்து பூக்கடை ராமச்சந்திரன் கூறுகையில், “இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2,500 ஆக விலை உயர்ந்துள்ளது. முல்லை ரூ.1,500, பிச்சிப்பூ ரூ.1,200, சம்பந்தி ரூ.200 செவ்வந்தி ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.150, அரளி ரூ.300 விற்கிறது. மற்ற பூக்கள் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இன்னும் அதிகமான விலைக்கு மல்லிகைப்பூ விற்கும்’’ என்றார்.

கரோனா தொற்று நோய் பரவல் காலத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கியதால் மல்லிகை பூக்கள் தேவைப்படாமல் இருந்தது. கோயில்களும் மூடப்பட்டதால் பூஜைகளுக்குக்கூட பூக்கள் விற்பனையாகவில்லை. இதனால், மல்லிகைப்பூ தோட்டங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட பாதிப்பே தற்போது மல்லிகைப்பூ பற்றாக்குறைக்கு காரணம். தோட்டக்கலைத்துறை மல்லிகைப்பூ சாகுபடியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூ வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.