மதுரையில் விடிய விடிய மீன் வியாபாரம் நடக்கும் மாட்டுத்தாவணி மின்நைட் மீன் மாரக்கெட்டில் அனைத்து வகை மீன்களும் கிடைப்பதோடு மீன்கள் ப்ரஷாக விற்கப்படுவதால், இந்த மீன் மார்க்கெட் தென் தமிழக மக்களிடையே பிரபலமாகி வருகிறது.

தென் தமிழகத்தில் மிகப்பெரிய மீன் மார்க்கெட்டாக மதுரை கரிமேடு மீன் மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மீன் மார்க்கெட் இடநெருக்கடியில் போக்குரவத்து நெரிசல் மிகுந்த புதுஜெயில் ரோட்டில் நகருக்குள் செயல்பட்டது. அதனால், வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மீன் வாகனங்கள் வந்து செல்வதற்கு சிரமப்பட்டன. அதனால், வியாபாரிகள் மாற்று இடம் கேட்டு கடந்த 10 ஆண்டாகவே போராடி வந்தனர்.

எதிர்பாராதவிதமாக கடந்த 3 ஆண்டிற்கு முன் கரோனா தொற்று பரவியதால் தற்காலிகமாக இந்த மீன் மார்க்கெட், மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு ஒரு ஏக்கர் பரப்பளவில் செயல்பட தொடங்கியது. அதன்பின் இந்த மார்க்கெட், மாட்டுத்தாவணி மொத்த வியாபாரிகள் மீன் மார்க்கெட் சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது. இந்த மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவா, கல்கத்தா மற்றும் ராமேசுவரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பிற கடலோர மாவட்டங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன.

இந்த மார்க்கெட்டில் மொத்தம் 60 கடைகள் செயல்படுகின்றன. கடை வைத்திருப்போர், மாநகராட்சிக்கு வாடகையாக ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3,500 வரை வாடகை செலுத்துகிறார்கள். ஒரு நாளைக்கு 300 டன் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. கடல் மீன்கள் மட்டுமில்லாது குளத்து மீன், கண்மாய் மீன்களும் விற்பனைக்கு வருகின்றன. அனைத்து வகை மீன்களும் ப்ரஷாக மலிவு விலையில் கிடைப்பதால் வியாபாரிகள் மட்டுமில்லாது மதுரை நகரில் வசிக்கும் பொதுமக்களும் மீன்கள் வாங்க இந்த மார்க்கெட்டில் திரள்கிறார்கள்.

இரவு 10 மணிக்கு தினமும் செயல்பட ஆரம்பிக்கும் இந்த மீன் மார்க்கெட் விடிய விடிய மின் நைட் மார்க்கெட்டாக மறுநாள் காலை 7 மணிவரை செயல்படுகிறது. இரவு முழுவதும் மின்னொளியில் பரபரப்பாக நடக்கும் இந்த மீன் மார்க்கெட் தூங்கா நகரம் என்ற பெருமையை மதுரை மாநகரம் மீட்டெடுக்க வைத்துள்ளது. மீன்களை வாங்கும் பொதுமக்கள், அதன் அருகில் உள்ள மீன் வெட்டும் தொழிலாளர்களிடம் கொடுக்கிறார்கள். அவர்கள் மீன்களை வெட்டிக் கொடுத்துவிடுகிறார்கள்.

வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மீன் வியாபாரிகள், உள்ளூர் சில்லறை வியாபாரிகள், ஏலத்தில் மீன்களை மொத்தமாக வாகனங்களில் எடுத்து செல்கிறார்கள். சணிக்கிழமை இரவு மார்க்கெட் மாட்டுத்தாவணி பஸ்நிலையம் பகுதியை ஸ்தம்பிக்க வைக்கும் அளவிற்கு வியாபாரம் களைகட்டுகிறது. வெளி மீன் கடைகளில் கிலோ ரூ.400க்கு விற்கப்படும் மீன்கள் இந்த மார்க்கெட்டில் ரூ.150 முதல் ரூ.200 வரை விலை மலிவாக கிடைக்கிறது. அனைத்து வகை மீன்களும் ப்ரஷாக கொண்டு வந்து விற்பதால் பொதுமக்கள் மத்தியில் இந்த மீன் மார்க்கெட் வரவேற்பை பெற ஆரம்பித்துள்ளது.

மாட்டுத்தாவணி மீன் மொத்த வியாபாரிகள் மீன்மார்க்கெட் சங்கத் தலைவர் எம்.தாஸ் கூறுகையில், ”மாட்டுத்தாவணி மார்க்கெட்டிலிருந்து குமுளி வரையும், தெற்கே திருநெல்வேலி வரையும், மானாமதுரை, திருப்பத்தூர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. கடலோர மாவட்ட மீன் வியாபாரத்திற்கு மதுரையில் இந்த மீன் மார்க்கெட் ஒரு மையமாக திகழ்கிறது.

வெளிமாவட்டங்களில் இருந்து ரிங் ரோடு வழியாக மீன் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் எளிதாக மார்க்கெட் வருகிறார்கள். பஸ்நிலையம் அருகே இருப்பதால் டவுன் பஸ், ஆட்டோவில் வந்து பொதுமக்களும் மீன் வாங்க வருவதற்கு வசதியாக உள்ளது. தற்போது தற்காலிகமாகதான் மாநகராட்சி இந்த இடத்தை வழங்கி உள்ளது. இந்த இடத்தை நிரந்தரமாக வழங்குவதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.