மதுரை: மகா சிவராத்திரியையொட்டி பிப்.18-ம் தேதி கோவை ஈசா யோகா மையத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்கிறார்.

முன்னதாக, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அவர் தரிசனம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக டெல்லியில் இருந்து பிப். 18-ம் தேதி தனி விமானம் மூலம் மதுரை வரும் குடியரசு தலைவர், பின்னர் கார் மூலம் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்கிறார். அங்கு சுவாமி தரிசனம் முடிந்த பிறகு, சுற்றுச்சாலை வழியாக விமான நிலையம் சென்று கோவைக்கு செல்லவுள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

கடைகள் அகற்றம்: குடியரசு தலைவர் வருகையையொட்டி, மீனாட்சி கோயிலைச் சுற்றியுள்ள நடைபாதைக் கடைகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன், ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், காவல்துறை அதிகாரிகள் மீனாட்சி அம்மன் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். மேலும், பாதுகாப்பு குறித்து காவல் ஆணையர் நரேந்திரன் நாயரும் சக அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

போலீஸ் குழு வருகிறது: டெல்லியில் இருந்து ஐஜி அந்தஸ்திலான அதிகாரி தலைமையிலான குழு ஒன்று இன்று மதுரை வருகிறது. அக்குழு மதுரை காவல் அதிகாரிகள் மற்றும் கோயில் அலுவலர்களுடன் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துகிறது என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.