இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக காங்கிரஸாரிடம் ஆதரவு கோர இன்று மாலை சென்னை வருகிறார். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வரும் 17-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இப்பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர்களான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே, கேரள மாநிலத்தை சேர்ந்த சசி தரூர் போட்டியிடுகின்றனர். இருவரும் ஒவ்வொரு மாநிலமாக சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். கடந்த 6-ம் தேதி சசிதரூர் சென்னை சத்யமூர்த்தி பவனுக்கு வந்து தமிழக காங்கிரஸாரிடம் ஆதரவு கோரினார்.

இந்நிலையில், மல்லிகார்ஜூன கார்கே இன்று மாலை 5.30 மணிக்கு சத்யமூர்த்தி பவனுக்கு வருகிறார். கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அங்கு தமிழக காங்கிரஸாரிடம் மல்லிகார்ஜூன கார்கே ஆதரவு கோர உள்ளார்.