Site icon Metro People

டெல்லி அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு

டெல்லி மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தைப் பறிக்கும் மத்திய அரசின் அவசரச் சட்டத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

டெல்லி யூனியன் பிரதேசத்தின் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே இருக்கிறது என்றும், துணைநிலை ஆளுநருக்கு அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. முதல்வர் மற்றும் அமைச்சரவையின் வழிகாட்டலின் கீழ் டெல்லி துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை அடுத்து, டெல்லி அரசின் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கே இருக்கும்படியாக மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றியது.

இந்த அவசரச் சட்டத்தை கருப்புச் சட்டம் என கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, இந்த அவசரச் சட்டம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தோற்கடிக்கப்பட ஆதரவு கோரி எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் அர்விந்த் கெஜ்ரிவால் ஆதரவு கோரினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிராக மாநிலங்களவையில் தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள் என உறுதி அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, கொல்கத்தா சென்று சந்தித்த அர்விந்த் கெஜ்ரிவால் அவரிடம் ஆதரவு கோரினார். இந்தச் சந்திப்பின்போது, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்பட ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் உடன் இருந்தனர்.

இந்தச் சந்திப்பை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. இந்த அவசரச் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்போது, அதனை திரிணாமூல் காங்கிரஸ் எதிர்க்கும். அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த அவசரச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
Exit mobile version