பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகின் மிகப் பெரிய லூவ்ரே அருங்காட்சியகம் உள்ளது. இங்கு லியோனார்டோ டாவின்சியின் உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் பாதுகாக்கப்படுகிறது.

வழக்கம் போல் அருங்காட்சியகத்துக்கு நேற்று முன்தினம் பார்வையாளர்கள் ஏராளமானோர் வந்தனர். சக்கர நாற்காலியில் மூதாட்டி போல் வேடமிட்டு வந்த நபர் ஒருவர் திடீரென குதித்து எழுந்து, தான் அணிந்திருந்த ‘விக்’கை தூக்கி வீசினார். மோனலிசா ஓவியத்தை அவர் உடைக்க முயன்றார். ஆனால் குண்டு துளைக்காத கண்ணாடியால் அந்த ஓவியம் பாதுகாக்கப்பட்டிருந்ததால் அவரது முயற்சி வெற்றி பெறவில்லை. இதையடுத்து தான் கொண்டு வந்திருந்த கேக்கை ஓவியத்தின் கண்ணாடி மீது வீசி மெழுகினார்.

இதனால் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு பாதுகாப்பு பணியாளர்கள் அந்த நபரை பிடித்து வெளியேற்றினர்.

இதனிடையே கேக் பூசப்பட்ட மோனலிசா ஓவியத்தை பார்வையாளர்கள் செல்போனில் படம் பிடித்தனர். இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மோனலிசா ஓவியம் விஷமியால் குறிவைக்கப்பட்டது இது முதல் முறையல்ல. 1956-ல் விஷமி ஒருவர் மோனலிசா ஓவியம் மீது அமிலம் வீசியதால் அதன் கீழ்ப் பகுதி சேதம் அடைந்தது. இதன் பிறகே குண்டு துளைக்காக கண்ணாடிக்குள் ஓவியம் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.