இன்று பொள்ளாச்சியில் தொடங்கப்படுவதாக இருந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை மணிரத்னம் ரத்து செய்துள்ளார்.

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை இரு பாகங்களாக எடுத்து வருகிறார் மணிரத்னம். முதல் பாகத்தின் வசனக் காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், ஒரு பாடல் காட்சியை இன்று முதல் பொள்ளாச்சியில் எடுக்க திட்டமிட்டிருந்தனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள் ஏற்கனவே பொள்ளாச்சி சென்று படப்பிடிப்புக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், பொள்ளாச்சிக்கு கிளம்பிய மணிரத்னம் தனது பயணத்தை ரத்து செய்திருக்கிறார். அத்துடன் பொள்ளாச்சி சென்றவர்களை திரும்பிவர கூறியிருக்கிறார். எதற்காக இந்த திடீர் முடிவு என்பது தெரியவில்லை.

தற்போது சர்தார் படப்பிடிப்பில் இருக்கும் கார்த்தியும், பொள்ளாச்சியில் நடைபெற இருந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்நிலையில் தான் மணிரத்னம் படப்பிடிப்பை ரத்து செய்துள்ளார்.

பொள்ளாச்சியில் எடுக்கப்பட இருந்தது பாடல் காட்சி என்றும், அந்தப் பாடல் காட்சி இல்லாமலே படத்தை வெளியிட மணிரத்னம் ஒருவேளை தீர்மானித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.