பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக பெருந்திரள் பொதுக்கூட்டத்தை விரைவில் சென்னை மாநகரில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு கட்சிகளும் சமூக அமைப்புகளும் கலந்துகொண்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள தீர்மானங்கள் குறித்து திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய அரசமைப்பின் அடிக்கட்டுமானத்தையே தகர்க்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை (EWS) எதிர்த்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திட தமிழகம் தழுவிய அளவில் பொதுக்கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்துவது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் இன்று (15.11.2022) நடைபெற்ற கட்சிகள் – சமூக அமைப்புகள் கூட்டத்தில் அமைப்புகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தீர்மானங்கள்:

1. முன்னேறிய சாதியில் நலிந்த பிரிவினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் எனப்படுவது – இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்லும் சமூகநீதித் தத்துவத்துக்கு முரணானது என்பதாலும், உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக இருப்பதாலும், நலிந்த பிரிவினரில் சாதிப் பிரிவினையைக் கற்பித்து பாகுபாடு காட்டுவதாக இருப்பதாலும், அதனை நாங்கள் நிராகரிக்கிறோம். இது குறித்து உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்பதான தீர்மானம் 12.11.2022 அன்று நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதை வரவேற்று, நமது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

2. பொருளாதார அளவுகோலைக் கொண்டு இடஒதுக்கீடு தர முடியாது என இந்திரா சகானி வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் [15(4)] கொண்டு வந்தபோது, பொருளாதாரத்தில் பின் தங்கியோர் என்ற வாசகமும் இடம் பெற வேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தியபோது, சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் என்பது மட்டும்தான் வரலாற்று ரீதியாக சரியானது; பொருளாதார அளவுகோல் நிரந்தரமற்ற ஒன்று என்பதாலும், அதனை நிராகரித்தனர். வாக்கெடுப்பில் 243 உறுப்பினர்கள் ‘சமூக ரீதியாக, கல்விரீதியாக பிற்படுத்தப்பட்டோர்’ என்பதற்கு ஆதரவாகவும், அய்ந்து உறுப்பினர்கள் பொருளாதார அளவுகோல் வேண்டும் என்றும் வாக்களித்தனர்.

தமிழகத்தில் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த ரூ.9,000 ஆண்டு வருமான வரம்பு, கடும் போராட்டத்தின் காரணமாக, அவராலேயே திரும்பப் பெறப்பட்டது. ஆகவே, இந்த நிலையில், 103-ஆவது திருத்தச் சட்டத்தில் பொருளாதார ரீதியாக மட்டுமே இடஒதுக்கீடு அனுமதிக்கப்படுகிறது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூக நீதிக்கும், இந்திரா சகானி வழக்கின் தீர்ப்புக்கும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் எதிரானது; 103-ஆவது திருத்த சட்டம் செல்லும் என ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் மட்டுமே தீர்ப்பளித்துள்ளனர். ஏனைய இரண்டு நீதிபதிகள் சட்டம் செல்லாது என தீர்ப்பளித்துள்ளனர்.

மூத்த நீதிபதி ரவீந்திர பட், இரண்டு முக்கிய காரணங்களை – அதாவது, பொருளாதார அளவுகோலை குறிப்பிட்ட முன்னேறிய சாதியினருக்கு மட்டுமே தர முடியாது. அனைத்துப் பிரிவு – ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரையும் உள்ளடக்கித் தர வேண்டும். மற்றும் போதிய பிரதிநிதித்துவமின்மை என்கிற அளவு கோல், ஓபிசி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டிற்கு முக்கிய காரணியாக இருக்கும்போது, உயர் சாதி நலிந்த பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் பற்றிய எந்த வாசகமும் இல்லாதது, சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது. ஆகவே, இச்சட்டம் செல்லாது என தீர்ப்பளித்துள்ளார்.

இதற்கு தலைமை நீதிபதி யு.யு. லலித்தும் ஆதரவு அளித்துள்ளார். நாட்டின் மிக முக்கியமான சமூகநீதிக் கொள்கையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு பல பாதகங்களை ஏற்படுத்தும் என்கிற வகையில், இத்தீர்ப்புக்கு எதிராக மனுதாரர்கள் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திட வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

3. உயர்சாதி நலிந்த பிரிவினரில் ஏறத்தாழ 79 சாதிகள் பயனடைவார்கள் என்ற மாயையை தற்போது தோற்றுவிக்க சிலர் முயல்கிறார்கள். இது பிற்படுத்தப்பட்டோரை, ஒடுக்கப்பட்டோரை பிரித்தாளும் ஏமாற்று தந்திரம் ஆகும். சமூக நீதி கோட்பாட்டின் அடிப்படையில் அனைத்துப் பிரிவினருக்கும் இடஒதுக்கீடு அளித்த மாநிலம் தமிழ்நாடு. 1928-ஆம் ஆண்டு முதல் வகுப்புவாரி உரிமை என்ற அடிப்படையில் நூறு விழுக்காடு இட ஒதுக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அனைத்துப் பிரிவினருக்கும், முன்னேறிய பிரிவினருக்கும் அளித்த மாநிலம் தமிழ்நாடு. இதனை எதிர்த்து, தகுதிக்கும், திறமைக்கும் எதிரானது என்று கூறி, நீதிமன்றங்கள் சென்ற பிராமணர்களின் செயலால், அதுவரை இடஒதுக்கீடு பெற்று வந்த பிராமணர்கள் தவிர்த்த ஏனைய முன்னேறிய சமூகத்தினர் இடஒதுக்கீட்டை இழந்தனர் என்பது வரலாறு. ஆனால், இன்று பிற சாதிகளில் உள்ள நலிந்த பிரிவினர் குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

4. சாதிவாரியாக அனைத்துப் பிரிவினருக்கும் இடஒதுக்கீடு இருக்கவேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டால், மக்கள் தொகைக் கணக்கீடு அடிப்படையில் வகுப்புவாரி விகிதாச்சார முறை (Proportional Representation) அளிப்பதுதான் சரியாக இருக்குமே தவிர, அதில் குறிப்பிட்ட முன்னேறிய சாதியினருக்கு மட்டும், நலிந்த பிரிவினர் என அளிப்பது, முன்னேறிய சாதியில் பிராமணர்களுக்கு மட்டுமே வாய்ப்பை அளிக்கும் என்பது உறுதி.

5. இப்பிரச்சினை குறித்து நீதிமன்ற முறையீடு என்பதோடு நில்லாமல், மக்கள் மன்றத்திலும் தெளிவுபடுத்திட, பல்வேறு பகுதிகளிலும், நகரங்களிலும் பொதுக்கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்திடவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. இது குறித்து முதல் கட்டமாக அனைத்துக்கட்சித் தலைவர்கள் பங்குகொள்ளும் பெருந்திரள் பொதுக்கூட்டத்தை விரைவில் சென்னை மாநகரில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்படுகிறது.

6. சாதி வாரிக் கணக்கெடுப்பை எடுக்க முன்வருமாறு ஒன்றிய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது” என்று திராவிடர் கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுவின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.