விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தயாரிப்பாளர், வசனகர்த்தா உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இயங்குபவர், சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்று வந்தது. வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான ‘மாஸ்டர் செஃப்’ என்ற சமையல் நிகழ்ச்சி தற்போது சன் டிவி மூலம் இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளது. ‘மாஸ்டர் செஃப் இந்தியா – தமிழ்’ என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி தயாராகி வருகிறது. தமிழில் விஜய் சேதுபதியும், தெலுங்கில் தமன்னாவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளனர்.

ஆனால், ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சி தொடர்பாக ப்ரோமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சி ஒளிபரப்பு எப்போது என்பது தெரியாமல் இருந்தது. தற்போது சன் டிவி புதிய ‘மாஸ்டர் செஃப்’ ப்ரோமோ வெளியிட்டுள்ளது. இதில் ஆகஸ்ட் 7-ம் தேதி ஒளிபரப்பு தொடங்கும் எனவும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் எத்தனை மணிக்கு ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடப்படவில்லை.