ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

ஈட்டி எறிதலில் கிளாஸ் F45 பிரிவில் இந்திய வீரர் தேவேந்திர ஜஜாரியா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். சுந்தர் சிங் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார்.

தங்க மங்கை அவானி:

முன்னதாக, டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அவானி லெஹரா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பாராலிம்பிக்ஸில் இம்முறை தங்கம் வென்ற முதல் பெண்ணும் இவர்தான். அவானி 249.6 புள்ளிகள் எடுத்து உலகச் சாதனை படைத்துள்ளார்.

பதக்க நாயகர்கள்:

இதுவரை பாராலிம்பிக்ஸில் டேபிள் டென்னிஸ் கிளாஸ் 4 பிரிவில் இந்திய வீராங்கனை பவினாபென் படேல், ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் இந்தியாவின் நிஷாத் குமார், வட்டு எறிதலில் வினோத் குமார், மகளிர்க்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் அவானி லெஹரா, வட்டு எறிதலில் F56 பிரிவில் யோகேஷ் கதூனியா, ஈட்டி எறிதலில் கிளாஸ் F45 பிரிவில் தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங் ஆகியோர் பதக்கம் வென்றுள்ளனர்.

பாராலிம்பிக்ஸில் இதுவரை இந்தியா அதிகபட்சமாக 4 பதக்கங்கள் தான் பெற்றுள்ள இந்த முறை இந்திய வீரர்கள் இதுவரை 7 பதக்கங்களை வென்றுள்ளனர்.