மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை தமிழில் கற்பிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது: “நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக வரும் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும்.
வரும் 2027-ம் ஆண்டுக்குள் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று சமீபத்தில் வெளியான மார்கன் ஸ்டான்லி அறிக்கை தெரிவித்துள்ளது. துரிதமான செயல்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட கொள்கைகள் ஆகியவற்றின் காரணமாக கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் நரேந்திர மோடி அரசு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது.
அரசியல் வலிமை மற்றும் ஊழலற்ற ஆட்சி காரணமாக இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இருளுக்கு மத்தியில் உள்ள ஒளிப்புள்ளியாக இந்திய பொருளாதாரம் திகழ்கிறது என சர்வதேச நாணய நிதியம் வர்ணிக்கிறது. அதோடு, 2022-23ம் நிதி ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8 சதவீதமாக இருக்கும் என்றும், இதன்மூலம் இந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சியில் ஜி20 நாடுகளில் இந்தியா 2-ம் இடத்தை வகிக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமித் ஷா, 2023-24 நிதி ஆண்டில் இந்திய முதலிடத்திற்கு முன்னேறும் என்று கணித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கான உயர் கல்வியை பல்வேறு மாநிலங்கள் தங்கள் சொந்த மொழியில் கற்பிக்கத் தொடங்கிவிட்டன. தமிழ்நாட்டிலும் தமிழ்மொழியில் மருத்துவக் கல்வியையும், தொழில்நுட்பக் கல்வியையும் வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் தமிழ்வழி கல்வி பயிலும் மாணவர்கள் மருத்துவ அறிவியலை எளிதாக புரிந்து கொள்ளவும், ஆராய்ச்சியில் ஈடுபடவும், அதன்மூலம் தங்கள் மொழியின் வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கவும் வாய்ப்பு உருவாகும்” என்று அமித் ஷா பேசினார்.