இன்ஸ்டாகிராம் சமூக வலைதள வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிக லைக்குகளை பெற்றுள்ளது உலகக் கோப்பையுடன் மெஸ்ஸி கொடுத்த உற்சாக போஸ். தற்போது வரையில் இந்த போட்டோ சுமார் 58 மில்லியன் (5 கோடியே 80 லட்சம்) லைக்குகளை கடந்துள்ளது.

போட்டோ மற்றும் வீடியோக்களை ஷேர் செய்ய பயன்பட்டு வருகிறது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம். இது மெட்டா நிறுவனத்தின் வசம் உள்ளது. இதில் பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரையில் பலரும் பயனர்களாக உள்ளனர். இவர்களில் அதிக ஃபாலோயர்களை பெற்றவர்களில் மெஸ்ஸி முதல்நிலை பயனர்களில் ஒருவராக உள்ளார். ஞாயிறு அன்று நடைபெற்ற நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா.

இந்த வெற்றிக்கு பிறகு கோப்பையுடன் அவர் கொடுத்த போஸ் மற்றும் அணியினருடன் இருக்கும் பத்து புகைப்படங்களை ‘சாம்பியன்ஸ் ஆப் தி வேர்ல்ட்’ என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு பதிவை பதிவு செய்திருந்தார். அது இதுவரையில் சுமார் 58 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. இதன்மூலம் இன்ஸ்டா தளத்தில் அதிக லைக்குகளை பெற்ற போட்டோவாக இது மாறியுள்ளது. இதற்கு முன்னர் ‘வேர்ல்ட் ரெக்கார்ட் எக்’ என ஒரு முட்டையின் போட்டோ 56 மில்லியன் லைக்குகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.