ப்ரீமியம் ரக கார் உற்பத்தி நிறுவனமான மெர்சடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதிகளவில் கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். அதன் மூலம் கார்களின் விலை குறையும். நடுத்தர வர்க்கத்தினரும் பென்ஸ் கார்களை வாங்க முடியும் என்று அவர் கருதுகிறார்.

இந்தியாவில் உள்ள உற்பத்தி கூடத்தில் முதன்முதலில் உற்பத்தி செய்யப்பட்ட EQS 580 4MATIC EV ரக மின்சார காரை அறிமுகம் செய்து வைத்தபோது அவர் இதனை தெரிவித்திருந்தார். மின்சார வாகனங்களுக்கு நாட்டில் மிகப்பெரிய சந்தை வாய்ப்பு இருப்பதாகவும் அவர் சொல்லியிருந்தார்.

“நீங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் உங்களது கார்களின் விலை குறையும். நாங்கள் எல்லோரும் நடுத்தர வர்க்கத்தினர். இப்போது என்னால் கூட உங்களது கார்களை வாங்க முடியாது” என ரூ.1.55 கோடி காரை அறிமுகம் செய்தபோது அவர் தெரிவித்திருந்தார்.

“மாற்று எரிபொருளுக்கான வாகனங்களின் பக்கமாக தேசத்தின் கவனம் இருந்து வருகிறது. சூழல் மாசுபாடுதான் இதற்கு முதல் காரணம். அதனால்தான் ஆட்டோமொபைல் துறையில் மின்சார வாகன பயன்பாட்டுக்கு நாங்கள் ஊக்கம் அளித்து வருகிறோம். உங்களது 101 சதவீத பர்ஃபெக்‌ஷன் கொண்ட உற்பத்தியை நாங்கள் கற்றுக் கொள்ள விரும்புகிறோம். அதை நடைமுறைப் படுத்துவது நாட்டுக்கு மிகவும் முக்கியம். பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனால் வேண்டும் என நினைக்கிறேன். எங்களது அரசு பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை ஊக்குவிக்க போவதில்லை” என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.