சென்னை: மகளிர் சுயஉதவிக் குழுக்களின் விற்பனை பரிவர்த்தனை மின்னணுமயமாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.

பின்னர் அத்துறையின் கீழ் வரும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது: மகளிர் உரிமைத் தொகை, இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம்,காலை சிற்றுண்டி திட்டம் என இந்தியாவே திரும்பிப் பார்க்கும் பல்வேறு முன்னோடிதிட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆற்றலாகவும், என்ஜினாகவும் செயல்படுகின்றனர்.

மகளிர் குழுக்களின் பரிவர்த்தனைகள் மின்னணுமயமாக்கப்படும். இதற்காக ஒருமின்னணு வர்த்தக வலைதளம் வடிவமைக்கப்பட்டு, வரும் நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தாய்மார்கள், மகளிர் குழுக்களில் இடம்பெற்றிருந்தால், கிராம அளவிலான மையகுழுவால் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு,சமையல் பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களைக் கொண்டு தொடர்புடைய பள்ளியிலேயே காலை உணவு தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

45 ஆயிரம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி: தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிவிப்பு: 45 ஆயிரம் கிராமப்புற இளைஞர் களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன்பயிற்சி ரூ.145 கோடியில் வழங்கப்படும். 50 ஆயிரம் மகளிர் குழுக்களுக்கு ரூ.75 கோடியில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.

மகளிர் குழுக்களால் நடத்தப்படும் 7,500 நுண், குறு தொழில் நிறுவனங்கள் ரூ.50 கோடியில் வலுப்படுத்தப்படும். 1000 கிராம ஊராட்சிகளில் உள்ள மகளிர் புதிய தொழில் தொடங்குவதற்கும், ஏற்கெனவே உள்ள தொழிலை மேம்படுத்தவும் நுண் தொழில் நிறுவனங்களுக்கான நிதிதிட்டம் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படும். ஊரகப் பகுதிகளில் 10 ஆயிரம் மகளிர் குழுக்கள் அமைக்கப்பட்டு, ரூ.15 கோடி சுழல் நிதி வழங்கப்படும்.

மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வுக்காக ரூ.7.34 கோடியில் பொருளாதார கூட்டமைப்புகள் உருவாக்கப்படும். 100 முக்கிய சுற்றுலா தலங்களில்மகளிர் குழுக்களின் பொருட்களை விற்கரூ.5 கோடியில் ‘மதி அங்காடிகள்’ அமைக்கப்படும். மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்க ரூ.3 கோடியில் ‘மதி எக்ஸ்பிரஸ்’ வாகனங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.

இதற்கிடையே, சட்டப்பேரவையில் முதல்முறையாக உதயநிதி பதிலுரை வழங்கி அறிவிப்புகளை வெளியிட்டதால், அதை பார்வையிட, அவரது தாயார் துர்காஸ்டாலின், மனைவி கிருத்திகா ஆகியோர்நேற்று சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.