புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே நரிக்குறவர் இல்ல திருமண விழாவுக்கு நேற்று அழையா விருந்தாளியாக சென்று வாழ்த்தி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
கீரமங்கலம் அருகே அறிவொளி நகரில் 200 நரிக்குறவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு வசிக்கும் ஒரு குடும்பத்தினரின் திருமணம் நேற்று அங்கு நடைபெற்றது. இந்நிலையில், இக்குடியிருப்பு வழியே நேற்று காரில் சென்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், திருமண விழாவுக்கு தன்னை வரவேற்று தனது படத்துடன் பிளக்ஸ் பேனர் வைத்திருப்பதைக் கண்டார். அந்த திருமணத்துக்கு அழைப்பிதழ் ஏதும் வராத நிலையில், தனது காரை அந்தக் குடியிருப்புக்குள் ஓட்டச் செய்தார்.
தங்கள் பகுதிக்கு அமைச்சர் வந்திருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள், விசிலடித்து ஆரவாரம் செய்து உற்சாகமாக அமைச்சரை வரவேற்றனர். பின்னர், அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மணமக்களை வாழ்த்திவிட்டு, அப்பகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக கூறினார்.
நரிக்குறவர் இல்ல திருமண விழாவுக்கு, அழையா விருந்தாளியாக சென்று பங்கேற்று மணமக்களை வாழ்த்திய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதனின் செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.