தஞ்சாவூர்/ திருவாரூர்/ மயிலாடுதுறை/ நாகப்பட்டினம்: டெல்டா மாவட்டங்களின் மழை பாதிப்பு ஆய்வறிக்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (பிப்.6) சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பிப்.1-ம் தேதி முதல் பிப்.3-ம் தேதி வரை பெய்த மழை காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்தன.

மேலும், அறுவடை செய்யப்பட்டு, கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் வைத்திருந்த நெல்மணிகளும், சாகுபடி செய்யப்பட்ட உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதம் வரை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வருவாய் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் கடந்த 2 நாட்களாக மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தப் பணியை நேரில் ஆய்வு செய்ய மாநில வேளாண்மை, உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவு வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் அடங்கிய குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.

இதைத்தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட வில்லியநல்லூர், சென்னியநல்லூர், பழைய கூடலூர், கிழாய் ஆகிய பகுதிகளில் நேற்று ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, நாளை (இன்று) முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். மேலும், ஆய்வின்போது விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் தெரிவித்த கருத்துகளும் முதல்வரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

தொடர்ந்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் குழுவினர் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர், சாட்டியகுடி, தலைஞாயிறு ஒன்றியம் காடந்தேத்தி ஆகிய இடங்களில் ஆய்வு செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் கோவிலூர் வடகாட்டில் சேதமடைந்த சம்பா நெற்பயிர்களை
பார்வையிட்ட அமைச்சர் அர.சக்கரபாணி. படம்: எஸ்.கோபாலகிருஷ்ணன்

தஞ்சாவூர், திருவாரூர்: அமைச்சர் அர.சக்கரபாணி, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புத்தூர் கிராமத்தில் மழையால் வயலில் சாய்ந்த நெற்பயிர்களை நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து, உக்கடை கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

2.15 லட்சம் ஏக்கர் பாதிப்பு: பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அர.சக்கரபாணி கூறியது: ஆய்வு அறிக்கையை நாளை (இன்று) முதல்வரிடம் வழங்கவுள்ளோம். மழை காரணமாக நெல், உளுந்து, நிலக்கடலை என 2.15 லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது என்றார்.

ஆய்வின்போது, எம்.பி. எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், தஞ்சாவூர் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருவாரூர் மாவட்டம் கோவிலூர் வடகாடு, எடையூர் சங்கேந்தி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அமைச்சர் அர.சக்கரபாணி ஆய்வு செய்தார். பின்னத்தூரில் விவசாயிகளிடம் கோரிக்கைகளைகேட்டறிந்தார். ராயநல்லூர், முதல்சேத்தி, வடகண்டம் ஆகிய இடங்களில் சம்பா நெற்பயிர் பாதித்த பகுதிகளை அமைச்சர் பார்வையிட்டார்.