சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தா.மோ.அன்பரசன் ஆகியோர், குறு, சிறு, நடுத்தரத் தொழில்களின் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினர்.

வரும் 13-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. முன்னதாக, வரும் 9-ம் தேதி தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ளார்.  

இந்நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரதிநிதிகளின் கருத்துகள், பட்ஜெட் தாக்கலை முன்னிட்டுக் கேட்கப்பட வேண்டும் என, அமைச்சர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுக்கிணங்க, இன்று (ஆக. 06) தலைமைச் செயலகத்தில் ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில், 2021-2022 திருத்திய வரவு – செலவு திட்ட அறிக்கைக்கான முன் ஆலோசனைக் கூட்டம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் சங்கங்கள் மற்றும் கூட்டமைப்புகளுடன் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், அனைத்துத் துறைகளின் கோரிக்கைகளையும் முதல்வர் பரிசீலிப்பதாகவும், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் குறித்த கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்துப் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை புதிய உத்திகளுடன் நவீனமயமாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் அருண் ராய், தொழில் மற்றும் வணிகத்துறை ஆணையர் கெஜலட்சுமி, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.