உத்தர பிரதேசத்தில் 296 கிமீ துாரம் கொண்ட பண்டேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். உத்தர பிரதேச மாநிலம், சித்ரகூட் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை எண். 35ல் இருந்து எட்டாவா மாவட்டம் குத்ரைல் கிராமம் வரை செல்லும் ஆக்ரா-லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையுடன் இணைக்கும் வகையில், பண்டேல்கண்ட் விரைவு சாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், ரூ.14 ஆயிரத்து 850 கோடி செலவில் 296 கிமீ தூரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த சாலைப்பணி 28 மாதங்களில் பணி முடிக்கப்பட்டுள்ளது.
இதை மோடி நேற்று திறந்த வைத்தார். விழாவில் பேசிய அவர், ‘பண்டேல்கண்ட் விரைவுச் சாலையால், சித்ரகூட் பகுதியிலிருந்து டெல்லி செல்வதற்கான பயண நேரம் 4 மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. விரைவுச்சாலையால் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்ல வகை செய்வதோடு மட்டுமின்றி, தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தும். இதற்கு முன், நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகள் மற்றும் நகரப் பகுதிகளில் மட்டுமே பெரிய அளவிலான கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில் கூட இதுவரை கண்டிராத இணைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. விரைவுச்சாலை காரணமாக, இப்பகுதியில் வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் உருவாகும்’’ என்றார்.