“தன்னைப் பார்த்து ராகுல்காந்தி கேள்வி கேட்டார் என்பதற்காக அவரை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடமாட்டேன் என்று சொல்வது என்ன ஜனநாயகம்? ஹிட்லர், முசோலினி போன்றவர்கள் இதைத்தான் செய்தனர். இன்றைக்கு மோடியும் அதைத்தான் செய்கிறார்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல்காந்தியை எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்த மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், சத்தியாகிரக அறப்போராட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதும் இதுபோன்ற பிரச்சினைகள் வந்தன. அப்போது மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தைச் சந்தித்திருக்கிறார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார். எந்த குற்றச்சாட்டையும் எதிர்கொண்டிருக்கிறார். பிரதமர் மோடியும் அதுபோல எதிர்கொள்ள வேண்டியதுதானே.

தன்னைப் பார்த்து ராகுல்காந்தி கேள்வி கேட்டார் என்பதற்காக அவரை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடமாட்டேன் என்று சொல்வது என்ன ஜனநாயகம்? ஹிட்லர், முசோலினி போன்றவர்கள் இதைத்தான் செய்தனர். இன்றைக்கு மோடியும் அதைத்தான் செய்கிறார்.

எப்போதுமே சர்வாதிகாரிகள், தோல்வியடைய தோல்வியடைய வெறிகொண்டு எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அதைத்தான் பிரதமர் மோடியும் செய்துகொண்டிருக்கிறார். பிரதமரின் இந்த செயல்பாடுகளை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது” என்று அவர் கூறினார்.