இம்மாதம் 5-ம் தேதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை – சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, வருகிற நவம்பர் 5-ம் தேதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை -பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளிலும் மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இவற்றுள் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி கலைஞர் நகரில் உள்ள ராணி அண்ணாநகர் பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் .கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார். மேலும், அந்தந்த பகுதிகளில் நடைபெறும் அனைத்து மருத்துவ முகாம்களையும் அதற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.

மண்டலம் 1-ல் 14 மருத்துவ முகாம்களும், மண்டலம் 2-ல் 8 மருத்துவ முகாம்கள், மண்டலம் 3-ல் 11 மருத்துவ முகாம்கள், மண்டலம் 4-ல் 15 மருத்துவ முகாம்கள், மண்டலம் 5-ல் 15 மருத்துவ முகாம்கள், மண்டலம் 6-ல் 15 மருத்துவ முகாம்கள், மண்டலம் 7-ல் 15 மருத்துவ முகாம்கள், மண்டலம் 8-ல் 15 மருத்துவ முகாம்கள், மண்டலம் 9-ல் 18 மருத்துவ முகாம்கள், மண்டலம் 10-ல் 16 மருத்துவ முகாம்கள், மண்டலம் 11-ல் 13 மருத்துவ முகாம்கள், மண்டலம் 12-ல் 12 மருத்துவ முகாம்கள், மண்டலம் 13-ல் 13 மருத்துவ முகாம்கள், மண்டலம் 14-ல் 11 மருத்துவ முகாம்கள், மண்டலம் 15-ல் 9 மருத்துவ முகாம்கள், என ஆக மொத்தம் 200 இடங்களில் மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்து வரும் காரணத்தினால் பருவமழைக்கால நோய்களான டெங்கு, ப்ளு என்கின்ற இன்புளுயன்சா, காலரா, டைபாய்டு, சேற்றுப்புண் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படாமல் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் – பெருநகர சென்னை மாநகராட்சியும் இணைந்து 200 வார்டுகளில் 200 மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு நடத்த உள்ளது.

இந்த முகாம்களில் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு முதலிய மழைக்கால தொற்று நோய்களுக்கு தேவையான தகுந்த சிகிச்சைகள் வழங்கப்படும். பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருட்டு நிலவேம்பு குடிநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ் வழங்கப்படும். இந்த மருத்துவ முகாம்களில் காய்ச்சல் மற்றும் இதர உபாதைகள் கண்டறியப்படுவர்கள் மேல்சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்க அறிவுறுத்தப்படுவார்கள். 200 வார்டுகளில் நடைபெறும் மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாமை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.