அமராவதி: ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டம் அருகே உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனிய வாயு கசிவால் 30-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அனகாபள்ளி மாவட்டம் அருகே பொருளாதார சிறப்பு மண்டல தொழிற்பேட்டை உள்ளது. இங்கு போரஜ் நிறுவனத்திற்கு சொந்தமான ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

வழக்கம் போல் தொழிற்சாலையில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட அமோனிய வாயு கசிவின் காரணமாக அங்கு பணிபுரிந்த பெண் ஊழியர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த அமோனிய வாயு கசிவை தடுப்பதற்காக பொருளாதார நிபுணர்களும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த அமோனிய வாயு கசிவு ஏற்பட்டது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்கள் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை எனவும் சிகிச்சைக்கு பிறகு அனைவரும் வீடு திரும்புவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.