அனைத்து நாட்களிலும் வழிபாட்டுத் தலங்களை திறக்கக் கோரிஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட 600 பேர் மீது, தடையை மீறி போராட்டம் நடத்தியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், அனைத்து நாட்களிலும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற 12 கோயில்கள் முன் பாஜக சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயில் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இளைஞரணித் தலைவர் வினோஜ் பி.செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அண்ணாமலை, “இன்னும் 10 நாட்களுக்குள் அனைத்து நாட்களிலும் கோயில்களைத் திறக்க உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் போராட்டம் நடத்தி, சிறை செல்லவும் தயங்கமாட்டோம். இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களையும் திறக்க வேண்டும்” என்றார்.

இந்நிலையில், தடையை மீறிபோராட்டம் நடத்தியதாக அண்ணாமலை, வினோஜ் பி.செல்வம் உட்பட 600 பேர் மீது வடக்கு கடற்கரைபோலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தடையை மீறி கூடுதல், தொற்று நோய் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here