லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உத்தர பிரதேசத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.75,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “உத்தர பிரதேசத்தில் சில்லறை வணிகம், புதுப்பிக்கத்தக்க எரிஆற்றல் உள்ளிட்ட துறையில் ரிலையன்ஸ் பெரும் முதலீடு மேற்கொள்ள உள்ளது. ரிலையன்ஸ் ரீடெயில், உத்தர பிரதேசத்தில் உள்ள சிறிய கடைகளை மேம்படுத்தி அவர்களது வருவாயை பெருக்கும். வேளாண் பொருட்களின் சந்தையையும் ரிலையன்ஸ் ரீடெயில் விரிவுபடுத்தும். புதுப்பிக்கத்தக்க எரிஆற்றல் கட்டமைப்பை ரிலையன்ஸ் உருவாக்கும்” என்று தெரிவித்தார்.

ஆதித்ய பிர்லா குழுமம் ரூ.25,000 கோடி முதலீட்டை அறிவித்துள்ளது. “முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியின் கீழ் உத்தர பிரதேசம் பெரும் மாற்றம் அடைந்து வருகிறது. முதலீட்டாளர்கள் உத்தர பிரதேசத்தில் குவிகின்றனர்” என்று ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா குறிப்பிட்டார்.

டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் கூறுகையில், “ ஸ்டீல் முதல் வாகனத் தயாரிப்பு என 18 டாடா குழும நிறுவனங்கள் உத்தர பிரதேசத்தில் கிளைபரப்பி உள்ளன. இதன் மூலம் 50,000 பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இது தவிர, உத்தர பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளையும் இந்தியாவின் முக்கிய பிராந்தியங்களுடன் இணைக்கும் திட்டத்தில் ஏர் இந்தியா உள்ளது” என்று தெரிவித்தார்.