கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்சத்தில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார். இதன்படி காமராஜர் சாலையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரைப் பதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று 3 வளைவுகள் அமைக்கப்படுகிறது. குறிப்பாக, கருணாநிதி நினைவிடத்தில், திறந்தவெளி காட்சி அரங்கம், அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.

இந்த அருங்காட்சியகம் ரூ.80 லட்சத்தில் அமைக்கப்படவுள்ளது. கருணாநிதி நினைவிடத்திற்கு உள்ளே 40 சென்ட் நிலத்தில் 1978 ச.மீ பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது. பாதி அளவு கட்டுமானம் தரைக்கு கீழ் இருக்கும் வகையில் இது அமைக்கப்படவுள்ளது. இதற்கு தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் இப்போது அனுமதி அளித்துள்ளது.

இதனிடையே, மெரினா கடலில் பேனா நினைவு சி்ன்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.