டெக் உலகின் மிகப்பெரிய பிசினஸ் ஒப்பந்தமாக பார்க்கப்பட்ட ட்விட்டர் உடனான ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க இருப்பதாக அறிவித்தார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதாவது 3 லட்சம் கோடி ரூபாய்க்கு ட்விட்டரை வாங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ட்விட்டரில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய இருப்பதாக மஸ்க் அறிவித்தார். குறிப்பாக, ட்விட்டர் நிறுவனத்தை வெளிப்படைத் தன்மையுள்ளதாக மாற்றுவேன் எனத் தெரிவித்திருந்தார். தற்போது போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம் குறித்த முழுமையான கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் அளிக்க வேண்டும் என கடந்த மே மாதம் மஸ்க் அறிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த ட்விட்டர் நிறுவனம், 5 சதவீதம் வரை போலி கணக்குகள் இருக்கலாம் என அறிவித்திருந்தது. 20 சதவீதம் வரை போலி கணக்குகள் இருக்கலாம் என்றும், ட்விட்டர் முழுமையான விவரங்களைத் தர மறுக்கிறது எனவும் மஸ்க் குற்றம்சாட்டினார்.

ட்விட்டர் நிறுவனம் சரியான பதிலை அளிக்காததால், 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனால் ட்விட்டரின் பங்குகள் 7 சதவீதம் குறைந்துள்ளது. எலான் மஸ்க் இந்த முடிவை எடுத்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தைச் சேர்ந்த பிரெட் டெய்லர், மஸ்க்கிற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார்.