சுற்றுச்சூழல் மாசினால் அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து இந்த ஆவணப் படம் தொடங்குகிறது.

முகமத் சவுத், நதீப் ஷெசாத் இருவரும் சகோதரர்கள், செவிலியர்கள். டெல்லியில் மாசடைந்த நச்சு காற்றினால் உயரே பறக்க முடியாமல் கீழே விழும் பருந்துகளை கைபற்றி வீட்டில் உள்ள அவர்களது சிறிய மருத்துவமனையில் மருத்துவ உதவிகள் செய்து மீண்டும் அவை பறக்கும் வரை அப்பறவைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இவர்களுக்கு சாலிக் ரஹ்மான் என்ற துருதுரு இளைஞரும் உதவி செய்கிறார். ஒரு கட்டத்தில் இந்த மூவரும் வானிலிருந்து விழும் இந்த பறவைகளை காப்பாற்றுவதற்காகவே தங்களது வாழ்க்கையை அர்பணித்து கொள்கின்றனர்.

இதற்கு ஒரு காட்சியை இங்கு உதாரணமாக கூறலாம், ஆற்றில் அடிபட்டு விழுந்திருக்கும் கருப்பு பருந்தை பார்த்து உதவி கோருகின்றனர் இந்த இளைஞர்கள். உதவி உடனடியாக கிடைக்கவில்லை. எனவே பருந்தை காப்பாற்ற அந்த ஆழமான ஆற்றில் நேரடியாகவே இறங்குகின்றனர்.

இவ்வாறு ஆறுகள், சாலைகள், இடிந்த கட்டிடங்கள் என பருந்தை காப்பாற்றும் இவர்களின் பயணம் நீள்கிறது. பறவைகளை மீட்டெடுக்கும் பயணத்திற்கு இடையே மதக் கொண்டாட்டங்களில் தீயிலிருந்து வரும் கரும்புகையில் மெல்ல ஊர்ந்து செல்லும் நத்தை, வானில் பறக்கப்படும் நூற்றுக்கணக்கான மாஞ்சா நூல் காத்தாடிகள், பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து வெளிவரும் ஆமை, மாசடைந்த நீரில் மூழ்கி இறக்கும் பூச்சிகள் என நம் முன் பல கேள்விகளை முன் வைத்திருக்கிறார் ஆவணப் படத்தின் இயக்குனர்.

மேலும், இப்படம் பல்வேறு உளவியல் கேள்விகளையும் நம் முன் வைக்க தவறவில்லை. அவசரமான உலகத்தில் இந்த கருப்பு பருந்துகளை மீட்டெடுக்கும் முயற்சிகளில் இந்த இளைஞர்கள் தங்களை மீட்டெடுத்து கொள்கிறார்களா? இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலையும் அதற்கு பொது சமூகத்தில் நிலவும் அமைதியையும் இந்த பருந்தை காப்பாற்றும் முயற்சிகளின் மூலம் இயக்குனர் கடத்தி இருக்கிறாரா? என சொல்லப்படாத கருத்துகள் இந்த ஆவணப்படத்தில் நிரம்பியுள்ளன. ஆனால், இவை பார்வையாளர்களின் பார்வைக்கு ஏற்பட மாறுபட கூடியவையே.

கடந்த 20 வருடங்களாக 20,000க்கும் அதிகமான கருப்பு பருந்துகளையும், பிற பறவைகளையும் காப்பாற்றி இருக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் இந்த ஆவணப்படத்தின் இறுதியில் விலங்குகளுக்கான மருத்துவமனையையும் திறக்கிறார்கள். அவர்களது கூற்றுப்படி இந்த மருத்துவமனை சுவாசிக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் உரியது..!

ஆல் தட் ப்ரீதஸ் (‘All That Breathes’) இந்த ஆவணப் படத்தை ஷானக் சென் இயக்கி இருக்கிறார். அற்புதமான ஒளிப்பதிவை தந்திருக்கிறார் பென் பெர்னார்ட்.

சிறந்த ஆவணப்படத்திற்கான கேன்ஸ் விருதுதுடன் ஆறு சர்வதேச விருதுகளை இந்த ஆவணப் படம் வென்றுள்ளது. சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதின் இறுதிப் பட்டியல்வரை இப்படம் சென்றது.

இறுதியாக, ஆல் தட் ப்ரீதஸ்.. மூலம் நம்மிடையே ஆழமான செய்தி ஒன்றை இஸ்லாமிய சகோதரர்கள் மூலமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறது. அது, “இந்த உலகம் அனைத்திற்குமானது, மனிதர்களும் இறைச்சிகள்தான்… உங்கள் மனசாட்சியை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்…!”