ஈஷா யோகா மையத்துக்கு சென்று மாயமான பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, தனிக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது.

திருப்பூரைச் சேர்ந்தவர் பழனிகுமார். பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மனைவி சுபஸ்ரீ (34). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சுபஸ்ரீ கோவை ஈஷா யோகா மையத்துக்கு 7 நாள் பயிற்சிக்கு செல்வதாக கணவர் பழனிகுமாரிடம் கூறிவிட்டு, கடந்த மாதம் 11-ம் தேதி கோவைக்கு வந்தார். பயிற்சி முடித்து 18-ம் தேதி சுபஸ்ரீ வீட்டுக்கு செல்லவில்லை. மாயமாகிவிட்டார்.

இதுதொடர்பாக பழனிகுமார் கடந்த மாதம் 19-ம் தேதி ஆலாந்துறை போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் மாயமானோர் பிரிவில் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே, பல்வேறு இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சுபஸ்ரீ சாலையில் நடந்து செல்வதும், அந்த வழியாக வந்த காரில் ஏறி சிறிது தூரம் சென்றதும் அதிலிருந்து இறங்கி ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. இதையடுத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்நிலையில், மாயமான சுபஸ்ரீ, செம்மேட்டை அடுத்த காந்தி காலனியில் உள்ள ஒரு விவசாய தோட்டக் கிணறில் சடலமாக நேற்று (ஜன.1) கண்டெடுக்கப்பட்டார். அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகளின் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று (ஜன 2) ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொணடனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். அதைத் தொடர்ந்து எம்.பி பி.ஆர்.நடராஜன் செயதியாளர்களிடம் கூறும்போது, ‘‘மாயமான சுபஸ்ரீ, இருட்டுப்பள்ளத்தில் யோகா உடையோடு ஓடுவது போன்ற சிசிடிவி காட்சி கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பெண் யாருக்கு பயந்து ஓடினார். இந்த ஒரு வார காலத்தில் அந்த மையத்தில் நடந்தது என்ன என 6 தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரித்து வரும் நேரத்தில், மாயமான அந்தப் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அவரது உடல் உடனடியாக கூறாய்வு செய்யப்பட்டு, அவர்களின் குடும்ப வழக்கத்துக்கு மாறாக எரியூட்டப்பட்டுள்ளது. இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் ஏன் ஓடினார், அவரை துரத்தியது யார் என்பது குறித்து தமிழக போலீஸார் உடனடியாக விசாரிக்க வேண்டும். இதற்காக தனியாக விசாரணைக் குழுவை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.