குஜராத் சட்டபேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. அதன்படி, 182 தொகுதிகள் கொண்ட குஜராத்தில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும், டிசம்பர் 5ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவும் நடைபெறுகிறது. குஜராத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி குஜராத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நேற்று வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் இந்த தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, குஜராத் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றால், சமையல் எரிவாயு உருளைகள் ரூ.500 வழங்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும்,காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் மாநிலத்தில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

300 யூனிட் மின்சாரம், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 தர உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. அத்துடன் குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தின் மாற்றி, சர்தார் படேல் பெயர் வைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதி பரபரப்புடன் பேசப்பட்டு கவனம் பெற்றுள்ளது.