நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று ஆவடி மாநகராட்சியின் 48 வார்டுகளுக்கு திமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அந்த வகையில், நேற்று ஆவடி மாநகராட்சியின் 26-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, திருமுல்லைவாயில், ஜெயா நகரைச் சேர்ந்த நரிக்குறவர் இனப் பெண் தனலட்சுமி(38), சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக வேட்புமனு தாக்கல் செய்ய, மாநகராட்சி அலுவலகத்துக்குத் தாரை தப்பட்டை முழங்க, 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்களுடன் ஊர்வலமாக வந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் தனலட்சுமி பேசும்போது, “என்னை வாக்காளர்கள் வெற்றி பெறச் செய்தால், என் வார்டில் வசிக்கும் பொது மக்களுக்கு என்னால் முடிந்த அனைத்து சேவைகளையும் முறையாகச் செய்வேன்” என்றார்.