இந்திய – சீன உறவில் மேலும் பிரச்சினைகளை உருவாக்க நேட்டோ முயல்வதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் நகரில் நடைபெற்ற நேட்டோ கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்ட பிரகடனம் தொடர்பாக ரஷ்யா அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கையை மையப்படுத்தி ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”ராணுவ கூட்டமைப்பான நேட்டோ சர்வதேச விவகாரங்களில் குறிப்பாக இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் முக்கிய கவனம் செலுத்தப் போவதாக பிரகடனப்படுத்தி உள்ளது. இந்திய – சீன உறவில் மேலும் பிரச்சினைகளை உருவாக்க நேட்டோ முயல்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகி உள்ளது.

ஐரோப்பிய கண்டத்தில் வாழும் மக்களுக்கான அமைப்பாக மட்டும் நேட்டோ இருக்கவில்லை. அதற்கு உலகலாவிய திட்டம் உள்ளது. குறிப்பாக, பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் சீனா, இந்தியா, துருக்கி, பிரேசில், அர்ஜென்டினா, எகிப்து மற்றம் பல்வேறு ஆப்ரிக்க நாடுகள் ஆகியவை குறித்து நேட்டோ தனது பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த நாடுகளிடம் இயற்கை வளங்கள் அதிகமாக இருப்பதால் அவற்றின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக சர்வதேச அளவில் புதிய பொருளாதார மையங்கள் உருவாகி வருகின்றன. இதை தடுக்க மேற்கத்திய நாடுகள் முயல்கின்றன.

புதிய காலனியாதிக்கத்தை உருவாக்கும் மேற்கத்திய நாடுகளின் முயற்சியைத் தவிர்க்கும் நோக்கில், ஆசிய, ஆப்ரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளுடன் இணைந்து ரஷ்யா செயல்பட்டு வருகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு, பிரிக்ஸ், சிஐஎஸ், ஈஏஈயு போன்ற சர்வதேச அமைப்புகள் இதில் முக்கிய பங்காற்றி வருகின்றன. மேலும், பல புதிய சர்வதேச அமைப்புகளை உருவாக்க நாங்கள் முயன்று வருகிறோம். இந்த அமைப்புகளை சீர்குலைக்க நேட்டோ முயல்கிறது.

ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் எதிராக இந்தோ பசுபிக் நாடுகளைத் திருப்பும் நோக்கில் மேற்கத்திய நாடுகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆசிய நாடுகளுக்குள் பிரச்சினைகளை அதிகரிக்கும் பழைய உத்திகளை நேட்டோ மேற்கொள்கிறது. ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச யுத்தத்தை மேற்கொள்வதற்கான அமெரிக்காவின் திட்டம்தான் தற்போது உக்ரைனில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அமெரிக்காவும் அதன் செயற்கைக்கோள்களும் சர்வதேச யுத்தத்திற்கான திட்டமிடல்களுடன் இயங்கி வருகின்றன. இந்த உண்மையை யாரும் மறுக்க முடியாது. மேற்கத்திய நாடுகளில் உள்ள சார்பற்ற அரசியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள், அரசியல்வாதிகள் ஆகியோரின் அறிக்கைகள் இதை தெளிவுபடுத்துகின்றன.

2021 மார்ச் மாதம் உக்ரைன் விடுத்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ரஷ்யா ஆதரித்தது. போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் அந்த நாடு முன்மொழிந்த அம்சங்களை ஏற்று ஒப்பந்தத்தை நாங்கள் ஏறக்குறைய இறுதி செய்துவிட்டோம். ஆனால், மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்குக் கொடுத்த சிறிய அடி காரணமாக அந்த நாடு தற்போது ஒப்பந்தத்தை ஏற்க மறுக்கிறது. அதன் பிறகு ஒவ்வொரு முறையும் மேற்கத்திய தலைவர்கள் பேசிவருவது என்னவென்றால், ‘பேச்சுவார்த்தை நடத்த இதற்குள் என்ன அவசரம்’ என்பதுதான்” என தெரிவித்துள்ளார்.