தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தலைமையிலான தமிழக அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தனர்.
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைத் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சிக் குழுவினர் சந்தித்துப் பேசினர். திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தலைமையில் சென்ற இந்தக் குழுவில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜெயக்குமார், மதிமுக சார்பில் வைகோ, அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரவிக்குமார், பாமக சார்பில் ஜி.கே.மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடராஜன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமசந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
உள்துறை அமைச்சருடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி., டி.ஆர்.பாலு, “முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த நீட் விலக்கு தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளோம்.
கடந்த 3.3.2007ஆம் ஆண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதைச் சுட்டிக்காட்டி, அதேபோலத் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். இது தொடர்பாக சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர்களுடன் கலந்து பேசி உடனடியாக முடிவெடுத்து, என்ன முடிவெடுக்கப்படுகிறது என்பது குறித்து, தமிழக முதல்வரிடம் தெரிவிப்பதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக, தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய வெள்ள சேத நிவாரணம் தொடர்பாக முதல்வர் அளித்த 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்தோம். ஜனவரி 31ஆம் தேதிக்குள் தமிழகத்துக்குத் தேவையான நிதியை அனுப்பி வைப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்” என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஏற்கெனவே 3 முறை சந்திக்க தமிழக அனைத்துக் கட்சிக் குழு முயற்சி செய்தது. அது தோல்வியடைந்த நிலையில், இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.