தமிழகத்தில் கடைசியாக வந்த வெள்ளத்திற்கான நிவாரண நிதியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. இதன் மீது திமுக எம்.பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மத்திய அரசின் மீது மக்களவையில் புகார் தெரிவித்தார்.

இதன் மீது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.பியான டி.ஆர்.பாலு நேற்று பேசியதாவது: ”அனைத்துக் கட்சிக் குழு, உள்துறை அமைச்சர் அவர்களை சந்தித்த போது தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் தொடர்பான நிதியுதவியை வழங்க வேண்டுகோள் விடுத்தது. தமிழகம் அண்மையில் மூன்று முறை கடும் வெள்ளத்தைச் சந்திக்க நேரிட்டது. வெள்ள பாதிப்பின் காரணமாக எண்ணற்ற வீடுகள், விளை நிலங்கள் அனைத்தும் அழிவுக்குள்ளானது. நெல் வயல்கள் எல்லாம் சேதமடைந்தன. விவசாயிகள் கோடான கோடி ரூபாய் இழப்பிற்கு உள்ளாகினர். மத்தியக் குழுவும் அங்கே வந்து ஆய்வு செய்து சென்றது. ஆனால், தேசியப் பேரழிவு, மீட்பு மற்றும் நிவாரண நிதி மட்டும் இன்னும் வந்து சேரவில்லை.

மத்திய அரசு நிதியுதவி வழங்கவில்லை. ஜனவரி 31க்கு முன்பே நிதியுதவி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும், இதுவரையில் தமிழ்நாட்டிற்கு எதுவும் வந்து சேரவில்லை. கடந்த 16.11.2021, 25.11.2021 மற்றும் 15.12.2021 ஆகிய மூன்று நாட்களில் மொத்தம் 6,230 கோடி ரூபாய் நிதியுதவி கேட்டு தமிழக முதல்வர் பிரதமருக்கு உரிய மனுக்கள் மூலம் வேண்டுகோள் வைத்திருந்தார். ஆனால், நிதி எதுவும் விடுவிக்கப்படவில்லை.

கோவிட் நிதி

இதைத்தவிர, கோவிட் பெருந்தொற்றிலிருந்து மாநிலத்தை மீட்டெடுத்த ரூ.8,989 கோடி ரூபாய் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசினால் செலவிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு வந்து சேரவில்லை. இந்தியாவில் இன்று என்னதான் நடக்கிறது? நாங்கள் மாநிலங்களால் ஆன இந்த இந்திய ஒன்றியத்தில்தான் இருக்கிறோமா?

பிச்சைப் பாத்திரம்

நாங்கள் எல்லாம் இந்திய ஒன்றியத்தில் இருக்கிறோம் என்றால், ஒரே இந்தியாவில்தான் வாழ்கிறோம் என்றால், இந்தியப் பிரதமர் எங்களுக்குத் துணை நிற்க முன்வர வேண்டும். தொலைதூரத்தில் உள்ள டெல்லிக்கு பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்திக் கொண்டு செல்ல முடியாது. அப்படிப்பட்ட நிலையில் எங்களை விட்டு வைப்பது எனது நண்பர், பிரதமருக்கு அழகல்ல.

குஜராத்திற்கு நிகராக

உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத்திற்கு நிகராக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தையும் அவர் சரிசமமாக பாரபட்சமின்றி நடத்த வேண்டும். தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் வல்லமை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவற்றையெல்லாம் பிரதமரும், உள்துறை அமைச்சர் அவர்களும் முறையாகக் கவனத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு உரிய நியாயம் வழங்க முன்வர வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.