“தமிழகத்தில் மருத்துவப் படிப்பு கனவுடன் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்கள் நலன் தொடர்பான விஷயத்தில் இவ்வளவு அலட்சியம் காட்டப்படுவது வேதனையளிக்கிறது. நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை” என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்காக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவு இன்னும் மத்திய அரசுக்கு வந்து சேரவில்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் உறுதியளித்திருப்பதாக முதல்வர் கூறி 12 நாட்களாகியும், நீட் விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

நாடாளுமன்ற மக்களவையில் இது தொடர்பான வினாவுக்கு எழுத்து மூலம் விடையளித்த மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், “ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் அனைத்து சட்ட மசோதாக்களும் உள்துறை அமைச்சகத்தின் மூலம் தான் கையாளப்படும். ஆனால், நீட் விலக்கு சட்ட மசோதா எதுவும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வந்ததாக தகவல் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார். இதை விட அதிர்ச்சி அளிக்கும் பதில் எதுவும் இருக்க முடியாது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்; 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தை 142 நாட்களாக ஆய்வு செய்த ஆளுநர், அது கிராமப்புற, ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பதாகக் கூறி பிப்ரவரி 1ம் தேதி திருப்பி அனுப்பினார். ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட முன்வரைவை எந்தத் திருத்தமும் செய்யாமல் பிப்ரவரி 8ம் தேதி சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றிய தமிழக அரசு, அதை அதே நாளில் ஆளுநருக்கு அனுப்பியது.

எனினும், அதன்பின் ஒரு மாதமாகியும் நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை சுட்டிக்காட்டி, இது தொடர்பாக ஆளுநரை முதல்வர் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று கடந்த 8ம் தேதி அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டிருந்தேன். அதன்பின் மார்ச் 15ம் தேதி ஆளுநரை சந்தித்துப் பேசிய முதல்வர், நீட் விலக்கு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். ஆளுநர் அதை ஏற்றுக்கொண்டதாகவும், விரைவில் நீட் விலக்கு சட்டத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக முதல்வரிடம் உறுதி அளித்ததாகவும் அப்போது தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஆளுநர் உறுதியளித்து 12 நாட்களாகி விட்ட நிலையில், நீட் விலக்கு சட்டம் இது வரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்பது மக்களவையில் அளிக்கப்பட்ட விடையின் மூலம் உறுதியாகியிருக்கிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 19 சட்ட முன்வரைவுகள் ஆளுநர், குடியரசுத் தலைவர், மத்திய அரசு என பல்வேறு நிலைகளில் நிலுவையில் இருப்பதாக சட்டப் பேரவையில் நிதியமைச்சர் கூறியதன் மூலம் இது மறு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மருத்துவப் படிப்பு கனவுடன் பல்லாயிரக்கணக்கான
மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், அவர்கள் நலன் தொடர்பான விஷயத்தில் இவ்வளவு அலட்சியம் காட்டப்படுவது வேதனையளிக்கிறது; இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நீட் விலக்கு சட்டம் என்பது பொதுப்பட்டியலில் உள்ள மருத்துவக் கல்வி என்ற பொருள் சம்பந்தப்பட்டது ஆகும். இதில் ஆய்வு செய்வதற்கோ, சட்ட ஆலோசனை பெறுவதற்கோ எந்தத் தேவையும் இல்லை. இதற்கு தெளிவான முன்னுதாரணங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்வதற்கான சட்ட முன்வரைவு 06.12.2006 அன்று நிறைவேற்றி அனுப்பப்பட்ட போதும், முந்தைய அதிமுக ஆட்சியில் நீட் விலக்கு சட்டம் 31.01.2017 அன்று நிறைவேற்றி அனுப்பப்பட்ட போதும் அப்போதிருந்த
ஆளுநர்கள் அதிகபட்சமாக 3 நாட்களில் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தனர். இந்த வரலாற்றை அனைவரும் அறிவர்.

நீட் விலக்கு சட்டத்தில் ஆளுநர் முடிவெடுக்க எதுவும் கிடையாது; அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது தான் ஆளுநரின் பணி என்பதைத் தான் முந்தைய நிகழ்வுகள் காட்டுகின்றன. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு
சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பி, அது மீண்டும் பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதற்கு அவர் தாமதிக்காமல் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். ஆனால், அது குறித்து முதல்வர் நேரில் வலியுறுத்திய அதற்கு பிறகும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்
கிடப்பில் போட்டிருப்பது சமூக அநீதியாகும்.

2022-23ம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் ஜூலை மாதம் நடைபெற இருப்பதாகவும் அதற்கான அறிவிக்கை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்பிறகு நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுநரும், குடியரசுத் தலைவரும்
ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் செய்யப்படும் ஒவ்வொரு மணி நேர தாமதமும் மாணவர்களுக்கு மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடக்கூடும். ஒருவேளை 2022-23ம் ஆண்டும் நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற நிலை ஏற்பட்டால், அதற்கான
பழியை அரசு தான் சுமக்க நேரிடும்.

இந்த அவசரத்தை தமிழக அரசும் புரிந்து கொண்டு நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைக்க பாமக தயாராக உள்ளது. தமிழக ஆளுநரும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் விலக்கு சட்டத்திற்கு உடனே ஒப்புதல் தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.