பொக்காராவிலிருந்து ஜோம்சோமுக்கு இன்று காலை 9.55 மணிக்கு புறப்பட்ட விமானம் மாயமாகி உள்ளது. அந்த விமானம் விபத்துக்குள்ளானதா என்ற விவரம் இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

தாரா ஏர் நிறுவனத்தின் 9 NAET விமானம், தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 200 கிமீ தொலைவில் உள்ள பொக்ராவிலிருந்து, வடமேற்கில் 80 கிமீ தொலைவில் உள்ள ஜோம்சோம் நகருக்கு காலை 9.55 மணியளவில் புறப்பட்டது. நான்கு இந்தியர்கள் உட்பட 19 பயணிகளை ஏற்றிக் கொண்டு நேபாள நாட்டின் விமானம் சென்றது. சிறிது நேரத்தில் விமானம் கட்டுபாட்டு அறை உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலகிரி என்ற மலைப்பகுதிக்கு சென்றபோது விமானம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் தொடர்பை இழந்ததாக விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

காணாமல் போன விமானத்தில் மூன்று ஜப்பானியர்கள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீதமுள்ளவர்கள் நேபாள குடிமக்கள் மற்றும் விமானத்தில் பணியாளர்கள் உள்பட 22 பயணிகள் இருந்தனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.