திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முன்பதிவுக்கு கூடுதல் வசதிகளுடன் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள அன்னமையா பவனில் பக்தர்களுக்கு சிறந்த டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்காக டிடி தேவஸ்தானம் என்ற பெயரில் சோதனை அடிப்படையில் உருவாக்கப்பட்ட மொபைல் செயலியை அறங்காவலர் குழுத்தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேற்று அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் சுப்பா ரெட்டி கூறியதாவது: ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இதுவரை கோவிந்தா மொபைல் செயலி பயன்பாட்டில் இருந்தது. அது நவீனப்படுத்தப்பட்டு உலக தரத்தில் அதிக அப்ளிகேஷன்கள் இணைக்கப்பட்டு கூடுதல் வசதிகளுடன் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் செயலியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (ttddevasthanam) என்ற பெயரில் டவுன்லோட் செய்யலாம். இதில் ஏழுமலையான் கோயிலில் சுவாமி  தரிசனம் செய்ய டிக்கெட், சேவைகள், தங்குமிடம், அங்க பிரதக்ஷணம், சர்வதர்ஷன் போன்ற டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.