நவம்பர் 30ஆம் தேதிக்குள் வாங்கும் ட்ரோன்களுக்கு தனித்துவமான குறியீட்டு எண் ஆன்லைனிலேயே வழங்கப்படும்.

ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்குவதற்கான விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு எளிமையாக்கி அறிவித்துள்ளது.

ஆளில்லா சிறிய ரக விமானங்களை (ட்ரோன்) இயக்குவதற்கான விதிமுறைகளை மார்ச் மாதம் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. இந்த விதிமுறைகளில் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய விமான போக்குவரதத்து துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், புதிய ட்ரோன் விதிகளின்படி, இதுவரை இருந்து வந்த ட்ரோனுக்கான தனித்துவமான அடையாள எண்ணுக்கான ஒப்புதலுக்கு இனி காத்திருக்க தேவையில்லை. புதிய ட்ரோன்களின் ஒப்புதலுக்கு இதற்கு முன்பு 25 படிவங்கள் நிரப்பவேண்டி இருந்தது, தற்போது 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு வணிக ரீதியிலான ட்ரோன்களுக்கான, 10 ஆண்டுகள் ரிமோட் பைலட் உரிமத் தொகை 3 ஆயிரமாக இருந்த நிலையில், தற்போது 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. ட்ரோன்கள் எங்கெல்லாம் இயக்க அனுமதிக்கலாம் என புதிய டிஜிட்டல் வான்தளம் அடுத்த 30 நாட்களில் வெளியிடப்பட உள்ளது

பச்சை மண்டலங்களாக வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் 400 அடி உயரம் வரை ட்ரோன்களை இயக்க எந்த அனுமதியும் தேவையில்லை. மஞ்சள் நிறமாக வகைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் விமானநிலைய சுற்றுவட்டாரங்களில் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு வெளியே ட்ரோன்களை இயக்கிக்கொள்ளலாம்.

வணிக பயன்பாடு இல்லாத சிறிய ரக ட்ரோன்களுக்கு எந்தவித அனுமதியும் தேவையில்லை. இதுவரை 300 கிலோ எடையுள்ள பொருட்களை சுமந்துசெல்ல அளிக்கப்பட்ட அனுமதி, தற்போது 500 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பதிவு பெற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் ட்ரோன்கள் இயக்க தடைகள் இல்லை.

நவம்பர் 30ஆம் தேதிக்குள் வாங்கும் ட்ரோன்களுக்கு தனித்துவமான குறியீட்டு எண் ஆன்லைனிலேயே வழங்கப்படும். விதிகளை மீறி ட்ரோன் இயக்குபவர்களுக்கு அபராதம் 1லட்சம் ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சரக்கு கையாள்வதற்கென பிரத்யேக ட்ரோன் வழித்தடமும் வடிவமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.