தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகப் புதிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. எனினும் விளிம்புநிலை மாணவர்கள் சிறப்புப் பயிற்சி பெற முடியாமல் நீட் தேர்வால் பாதிக்கப்படுகின்றனர் என்று புகார் எழுந்தது.

கடந்த ஆட்சிக் காலத்தில் எதிர்க் கட்சியாக இருந்த திமுக, தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டம் இயற்றுவோம் என்று தெரிவித்திருந்தது. திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கடந்த ஜூன் மாதம் கமிட்டி அமைக்கப்பட்டது.

அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் கடந்த ஜூலை மாதம் தமிழக அரசுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. அதில், நீட் தேர்வை ரத்து செய்ய புதிய சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பரிந்துரைத்திருப்பதாகத் தகவல் வெளியானது. இந்தப் பரிந்துரைகளை ஆய்வு செய்து அதை நிறைவேற்றும் பொருட்டு தலைமைச் செயலாளரின் தலைமையில் உயர்மட்ட உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு, ”மருத்துவக் கல்வி சேர்க்கையின் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வைப் புறந்தள்ள புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளது. இதற்காக அடுத்த வாரம் சட்டப்பேரவையில் புதிய மசோதா கொண்டு வரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட்டு, அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காததால் சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனது.

நாடு முழுவதும் செப்டம்பர் 12-ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.