சென்னை: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு 2021-ம் ஆண்டு வழங்கிய உத்தரவின்படி, திருத்தப்பட்ட ‘கோழிப் பண்ணைகளுக்கான சுற்றுச்சூழல் வழிகாட்டுதல்களை’ மத்திய மாசு கட்டுப்பாட்டுவாரியம் கடந்த ஜனவரியில் வெளியிட்டுள்ளது. இது அனைத்துவகை கோழிப் பண்ணைக்கும் பொருந்தும்.

இதன்படி, ஒரே இடத்தில் 25 ஆயிரம் பறவைகளுக்கு மேல் வளர்க்கும் கோழிப் பண்ணைகள், பண்ணையை நிறுவுவதற்கான மற்றும் செயல்படுவதற்கான இசைவாணையை மாநில மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் உடனே பெற வேண்டும்.

ஒரே இடத்தில் 5 ஆயிரம் முதல்25 ஆயிரம் வரையிலான பறவைகளை வளர்க்கும் கோழிப் பண்ணைகள் 2023 ஜன.1-ம் தேதி முதல், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இந்த இசைவாணைகளை பெற வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். www.tnpcb.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.